மக்கள் காங்கிரஸிலிருந்து அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் நீக்கம்

மக்கள் காங்கிரஸிலிருந்து அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் நீக்கம்-Ali Sabri Raheem & Ishak Rahuman Suspended From ACMC Party Membership

- அரசியல் பீடம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அக்கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஆதரிக்கக் கூடாது என கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும் செயற்பட்டதனால் அவர்கள் இருவரையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்புரிமையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சிஐடி. தடுப்புக் காவலில் இருக்கின்ற நிலையில், கட்சித் தலைவரின் குறிப்பிட்ட அதிகாரங்களைப் பயன்படுத்த கட்சியின் அரசியல் உயர் பீடம் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டிடம் அனுமதியளித்திருந்தது.

அதற்கமைவாக, கட்சித் தலைவருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பதில் தலைவராக செயற்படும் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டினால் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களித்தபோதும், இஷாக் ரஹ்மான் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் அரசியல் பீடம் கூடி அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படுமென, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். சஹீட் தெரிவித்தார்.

இதேவேளை, இஷாக் ர‌ஹ்மான் க‌ட‌ந்த‌ தேர்த‌லின் போது, தான் ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல‌ எனவும் ச‌ஜித்தின் க‌ட்சிக்கார‌ன் என‌ மேடைக‌ளில் சொல்லியிருந்ததோடு, அவர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதே போல் அலி ச‌ப்ரி ர‌ஹீமும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ த‌னிக்க‌ட்சியில் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

(பைஷல் இஸ்மாயில்)


Add new comment

Or log in with...