ஈரான் ஜனாதிபதி தேர்தலில் இரு பழமைவாதிகள் போட்டி

ஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு நீதித் துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் சபாநாயகர் அலி லரிஜானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரான் உயர்மட்டத் தலைவரான ஆயதொல்லா அலி கமெனேயுடன் நெருக்கமானவர்களான இந்த இரு பழமைவாதிகளுமே முன்னணி வேட்பாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

பதவியில் இருக்கும் மிதவாதியான ஜனாதிபதி ஹசன் ரூஹானி இரண்டு தவணைகளை பூர்த்தி செய்திருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை போட்டியிட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் போட்டியிட 300க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனினும் பாதுகாவலர் சபையினால் இந்த எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது.

2017 ஆம் ஆண்டு தேர்தலில் 1600க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஆறு வேட்பாளர்களுக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட இந்த சபை அனுமதி அளித்தது.

ஈரான் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூன் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...