பந்தை சேதப்படுத்தியது அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தெரியும்

அவுஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது.

அந்த அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கேமரூன் பான்கிராப்ட் உப்புத்தாளை கொண்டு பந்தை ஒரு பக்கம் தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்தது கமரா பதிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பந்து ஸ்விங் ஆக வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்ததும், இதற்கு சூத்திரதாரியாக துணை தலைவர் டேவிட் வோர்னர் செயல்பட்டதும், இது விதிமுறைக்கு புறம்பானது என்று அறிந்திருந்தும் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அதை கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது.

அவர்கள் தங்களது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இது குறித்து விசாரணை நடத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும், ஸ்மித், வோர்னருக்கு ஓராண்டும் தடை விதித்தது. ஸ்மித் தலைவர் பதவியையும் இழந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் 28 வயதான பான் கிராப்ட் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள அவரிடம் நீங்கள் பந்தை சேதப்படுத்திய யுக்தி அணியின் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தெரியுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நிச்சயமாக என்று பதில் அளித்தார். ‘நான் இவ்வாறு செய்தது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

எனவே அனேகமாக அவர்களுக்கு இது தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஆனால் பந்துவீச்சாளர்களின் பெயர் விவரத்தை அவர் வெளியிடவில்லை. அந்த டெஸ்டில் பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க், நதன் லயன், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆடியது குறிப்பிடத்தக்கது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் புதிய தகவல்கள் இருந்தால் தங்களுக்கு அனுப்பலாம், இது குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூறியிருக்கிறது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.


Add new comment

Or log in with...