அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு | தினகரன்

அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

- அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி

அக்கரைப்பற்றில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்தார்.

கொவிட்-19 அசாதாரண சூழ் நிலையை சாதகமாக பயன்படுத்தி கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக விவசாயிகளால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தலைமையில் புதன்கிழமை (12) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளை பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு யூரியா உரம் விற்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்த வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்திற்கமைய வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், கூறினார்.

இச் சுற்றிவளைப்பின் போது காலவதியான உரம் மற்றும் கிருமிநாசினிகள் என்பவையும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவ் உர விற்பனை நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

ஒலுவில் விசேட நிருபர்


Add new comment

Or log in with...