உடல் ஆரோக்கியத்திற்கு வீட்டின் சுத்தமும் பிரதானம் | தினகரன்

உடல் ஆரோக்கியத்திற்கு வீட்டின் சுத்தமும் பிரதானம்

கொரோனா வைரஸ் மட்டுமல்ல நோய்தொற்றுகளை பரப்பும் கிருமிகளிடம் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டியது முக்கியமானது.

வீட்டின் தரைப்பகுதி, வீட்டில் உள்ள பொருட்கள் சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் அதன் மூலம் வைரஸ் பரவக்கூடும். ஏனெனில், சுத்தமில்லாத பொருட்களின் மேற்பரப்புகள் தொற்றுநோய் கிருமிகளை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டை சாதாரணமாக சுத்தம் செய்வதற்கும், நோய் கிருமிகள் நெருங்கவிடாமல் சுத்தம் செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.

தினசரி சுத்தம் செய்வது என்பது அழுக்குகளை அகற்ற உதவும். கிருமிகளையும் வெளியேற்றும்.
ஆனால், நோய் பரப்பும் வைரஸ் போன்ற தொற்று கிருமிகளை கொல்வதற்கு பிரத்தியேக இரசாயன கலவைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதை கவனத்தில் கொள்ளாமல் சாதாரணமாக சுத்தம் செய்தால் தரைப்பரப்பிலோ, மற்ற பகுதியிலோ பரவியிருக்கும் வைரஸ்கள் கைகளில் எளிதில் படிந்துவிடும். வீடுகளில் தரை உள்ளிட்ட பரப்புகளில் வைரஸ்கள் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதற்கு உறுதியான பதில் இல்லை. சில வகை வைரஸ்கள் ஓரிரு நாட்கள் உயிர்வாழும் தன்மை கொண்டவை.

வீட்டு அறையின் வெப்பநிலை, ஈரப்பதம், மேற்பரப்பு ஆகியவற்றை பொறுத்து அதன் ஆயுட்காலம் அமையும். வீட்டை தொடர்ந்து சுத்தம் செய்யாவிட்டாலோ அல்லது எங்காவது ஈரப்பதமாக இருந்தாலோ அங்கு வைரஸ்கள் பரவி இருக்கலாம். யாராவது இருமும்போதோ, தும்மும்போதோ வாயை மறைக்காவிட்டால் அவர்களை சுற்றியுள்ள பொருட்கள் வைரசுக்கு இறையாகி பாதிப்பை ஏற்படுத்திவிடும். டி.வி. ரிமோட்டுகள், சமையலறை கபோர்டுகள், அதிகம் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்கள் போன்றவற்றில் வைரஸ்கள் உயிர்வாழலாம்.

ஆதலால், எல்லா பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது. வீட்டின் தரைப்பகுதி மட்டுமின்றி சீலிங் பகுதிகள், மொட்டை மாடிகள், சமையல் அறையின் அடிப்பகுதிகள் போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். வழக்கமாக பயன்படுத்தும் கிருமி நாசினிகளை உபயோகித்தாலே போதுமானது. அவை ஓரளவுக்கு வைரஸ்கள் வளர்வதை தடுத்துவிடும். இந்த சமயத்தில் ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிருமிநாசினிகளை பயன்படுத்துவதும் நல்லது. வீட்டை சுத்தம் செய்தபிறகு கைகளை நன்றாக கழுவிவிட வேண்டும். வாய், கண்கள், மூக்கு போன்ற பகுதியை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

தரையை சுத்தம் செய்யும்போது ஒரே திசையில் ‘​ெமாப்’ கொண்டு துடைக்கக்கூடாது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அங்கும் இங்கும் வளைத்து ‘எஸ்’ வடிவத்தில் தரைப்பகுதியை துடைக்கலாம். இரண்டு முறை அவ்வாறு சுத்தம் செய்தால் எளிதில் அழுக்குகள் நீங்கிவிடும். துணியை கொண்டு சுத்தம் செய்தால் அதனை நன்றாக கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். அத்துடன் அந்த துணியை சுடுநீரில் அலசுவதும் நல்லது. வீட்டில் யாரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர் களது துணிகளை தனியாக துவையுங்கள். 


Add new comment

Or log in with...