நடால் - ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம் | தினகரன்

நடால் - ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலி பகிரங்க டென்னிஸ்:

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ்வை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை டெனிஸ் ஷாபோலோவ் 6-:3 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய நடால், கடுமையாக போராடி செட்டை 6-:4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

எதிர்பார்ப்பு மிக்க மூன்றாவது செட்டில், இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால், செட் டை பிரேக் வரை நீண்டது.

இதில் ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடிய நடால், செட்டை 7-:6 என கைப்பற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

அடுத்ததாக மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-:2, 6-:1 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


Add new comment

Or log in with...