ஐபிஎல் போட்டியை மீண்டும் நடத்துவது சவாலானது | தினகரன்

ஐபிஎல் போட்டியை மீண்டும் நடத்துவது சவாலானது

ராஜஸ்தான் அணி உரிமையாளர்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து சர்வதேச வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்படும்போது பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் கடந்த மாதம் தொடங்கி நடந்தது. இதற்கிடையே கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த 4-ம் திகதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினார்கள்.

இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. இதை மீண்டும் நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை ஆலோசித்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே வேறு இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான இடம் மற்றும் திகதியை தேர்வு செய்யவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்துவது மிகவும் சவாலானது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படேலே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டித் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் ஊடகங்களை நெருக்கமாக பின் தொடருகிறோம். போட்டியை நடத்த காலண்டரில் ஒரு இடத்தை கண்டுபிடிப்பதே சவால் என்று நினைக்கிறேன்.

வீரர்கள் ஏற்கனவே அதிக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதனால் அனைத்து நாட்களிலும் சர்வதேச போட்டித்தொடர்கள் உள்ளன. குறிப்பாக கொரோனா வைரசுக்கு பிறகு இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் சபைகள் முடிந்தவரை பல போட்டிகளையும், பல டெஸ்ட் தொடர்களையும் நடத்த முயற்சிக்கின்றன. எனவே ஐ.பி.எல். போட்டியை நடத்துவது உண்மையான சவாலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சிறிய வாய்ப்பு உள்ளது. அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தவும் சில வாய்ப்பு இருக்கிறது. இது 20 ஓவர் உலக கிண்ணத்துக்கு முன்பாகவோ அல்லது பிறகோ இருக்கலாம்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து சர்வதேச வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்படும்போது பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்து உள்ளது.

சர்வதேச தொடரில் விளையாட இருப்பதால் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல்.லில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...