இளைஞர் நல்லிணக்க விளையாட்டு நிகழ்வு | தினகரன்

இளைஞர் நல்லிணக்க விளையாட்டு நிகழ்வு

இளைஞர்களுக்கான நல்லிணக்கத்திற்கான விளையாட்டு நிகழ்வு ஒன்று வவுனியா நகரசபை மைதானத்தில் கடந்த மாதம் (10) நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ. ரமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அராசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்துகொண்டிருந்தார்.

விளையாட்டு நிகழ்வுகளின் ஊடாக இளைஞர்களிடம் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் மூவினத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவித்து கலாசார நடனத்துடன் அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சர்வமதப் பிரார்த்தனையை தொடர்ந்து இளைஞர்கள் உறுதி எடுத்தல் நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

வவுனியா, செட்டிக்குளம், வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகள் கரப்பந்தாட்டம், கயிறிழுத்தல், இலக்கிற்கு எறிதல், கிளித்தட்டு, சாக்கோட்டம், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்களில் கலந்துகொண்டிருந்தனர்.

நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இவ்விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கலாசார நடனத்தை வவுனியா நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலய மாணவர்கள், இரட்டை பெரியகுளம் பரகும்பர மகாவித்தியாலயம் மற்றும் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஐ.பிரதாபன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கெ.டி.சி.காமினி, கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோவில் குளம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...