தொடர்ச்சியான இழப்புக்களால் தத்தளிக்கும் தமிழ்த்திரையுலகம்

என்றுமில்லாதவாறு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகத்தையே கண்ணீரில் ழுழ்கடித்துக் கொண்டிருக்கின்றது 'கொரோனா'. இந்த நுண்ணுயிர்க் கொல்லி, வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் மண்ணுக்குள் அமர்த்திக் கொண்டிருக்கின்றது. இக் கொடிய நோய் இந்தியாவைப் பொறுத்தவரை பல மக்கள் நாளும் பொழுதுமாய் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பல பிரபலங்கள் இந்த நோய்த் தொற்று காரணமாக அண்மிய நாட்களாய் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். தென்னிந்தியத் திரைப்படத் துறையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு உலகப் பிரசித்தி பெற்ற பாடகர் S.P. பாலசுப்ரமணியத்தின் மறைவே இன்னும் பலரது மனதில் கனத்த துயரை தந்து கொண்டிருக்கின்ற வெளியில் கடந்த ஒரு மாதத்திற்குள் பல பிரபல்யங்களை இழந்து தமிழ் திரையுலகம் தொடர்ச்சியான சோக அலைக்குள் ழூழ்கியிருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பல நடிகர்கள், திரைத்துறை, கலைத்துறை சார் ஆளுமைகள் என பலரின் பிரிவுத் தவிப்புக்கள் மக்களை பாதித்திருக்கின்றது. அவர்களில் முக்கியமானவர்களை பற்றி பார்ப்போம்.

1.குணச்சித்திர நடிகர் விவேக்

ஒரு நகைச்சுவை நடிகர் என்ற அடையாளத்தோடு மிக நீண்டகாலம் திரைவெளியில் வலம் வந்தாலும் சமூக நோக்கம் கருதிய விடயங்களை நகைச்சுவை மூலம் வெளிக்கொணர்ந்து ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். அனைத்து பாத்திரங்களிலும் பாத்திர வார்ப்பிற்கு ஏற்ப மக்களை சிந்திக்கத் தூண்டும் வகையிலான காட்சிகளில் நடித்து வரவேற்பை பெற்றவர் இவர். தமிழ் திரையுலகில் அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்த விவேக் ஒரு சூழலியலாளரும் கூட.மரம் நடுவோம் என்ற திட்டம் மூலம் சுமார் முப்பது இலட்சம் வரையான மரங்களை நாட்டி அனைவரையும் சிந்திக்க வைத்து பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் இந்தத் திட்டத்திற்குள் உள்வரப்பண்ணி பெரிய தொரு சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர் இவர். உண்மையில் நடிகர் விவேக்கின் இழப்பு தமிழ் திரையுலகிற்கும்,சூழலியல் துறைக்கும் பேரிழப்பே.கொரோனா நோயிற்கு உட்படாமல் அதிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கான தடுப்பூசியை போட்டுக் கொண்ட அடுத்த ஓரிரு நாளில் மரணமான இவரது மரணம் மிகப் பெரிய இழப்பே ஆகும்.

2) குணச்சித்திர நடிகர் பாண்டு

தமிழ் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக நூற்றுக்கதிகமான திரைப்படங்களில் நடித்தவர் பாண்டு. நகைச்சுவையை பேச்சு மொழிக்கூடாக மட்டுமன்றி உடல் மொழிக்கு ஊடாகவும் நகர்த்தி ரசிகர்களை ரசிக்கச் செய்வதில் கைதேர்ந்தவர். காட்சிகளிற் கேற்ப தனது பாத்திரங்களை மாற்றியமைத்து அனைவரையும் சிரிக்கவைப்பதில் வல்லவராக திகழ்ந்தார். அந்த நாக்கை கடித்து ஆ..........என்று சொல்லும் இவரது தனிப்பாங்கு உண்மையில் இவரின் தனித்துவமாக அனைவராலும் விரும்பி இரசிக்கப்பட்டது.

1970 களில் தழிழ் திரையுலகிற்குள் பிரவேசித்த பாண்டு கடந்த 2018 வரை தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்து பலரின் விருப்பை பெற்றார். கொரோனா சிகிச்சையில் இருந்த போது மரணமடைந்தார்.

சிங்கம் திரைப்படத்தின் ஆட்டை காணவில்லை என்ற நடிகர் விவேக் உடனான நகைச்சுவை காட்சியும், கில்லி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் உடனான காட்சியில் அவன் நெருப்பு மாதிரி இருந்தான் என்ற நகைச்சவை காட்சிகளும் அநேகராலும் அண்மிய வருடங்களில் விரும்பி ரசிக்கப்பட்டது.

3. பாடகர் கோமகன்

தமிழ் இசை சூழலில் ஒரு மாற்றுத் திறனாளிக் கலைஞராக விளங்கியவர் பாடகர் கோமகன். நீண்ட காலமாக இசைக்குழு ஒன்றினை நிர்வகித்தும் வந்த கோமகன், 2004 ஆம் ஆண்டளவில் வெளியான இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்ற பாடலில் நடித்தும் ஓரிரண்டு வரிகளையும் பாடி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்தவர். இந்தப் பாடலிற்கு பின்னாளில் தேசிய விருதும் கிடைத்தது. பாடலாசிரியர் பா. விஜய்க்கும் பாடகி சித்திராவுக்கும் தேசிய விருது கிடைத்தது. மாற்றுத் திறனாளிகள் நல்வாரிய உறுப்பினராகவும் பணியாற்றிய கோமகன் இசைப்பள்ளியொன்றையும் நடாத்தி வந்தார். 2019ம் ஆண்டு தமிழக அரசினால் கலைமாமணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

4.நகைச்சுவை நடிகர் ஜோக்கர் துளசி

தமிழ் திரைச் சூழலில் மூத்த பெரும் கலைஞராக நன்கறியப்பட்டவர் ஜோக்கர் துளசி. கண்மணி என்னும் மேடை நாடகக் குழு வாயிலாக நடிகராக அறிமுகமாகி பல மேடை நாடகங்களில் நடித்த நாடகக் கலைஞரும் இவர் ஆவார். 'உங்களில் ஒருத்தி' என்ற திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடிகராக நடித்துள்ளார். திருமதி பழனிச்சாமி திரைப்படத்தில் இவரது நடிப்பு அநேகராலும் வியந்து பாராட்டப்பட்டது.

சின்னத்திரை தொடர்கள் பலவற்றின் வாயிலாக அண்மிய பல ஆண்டுகளாக அநேக இல்லத்திரை ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்ட இவர் கோலங்கள், வாணி ராணி, கஸ்தூரி நாணல், மாதவி உள்ளிட்ட பல தொடர்கள் ஊடான பல மக்களின் அபிமானத்தை பெற்ற ஒருவராகவும் வலம் வந்தார்.

உண்மையில் இந்த நோய்க்காலம் தனை யாரும் அவ்வளவு எளிதில் எடுத்துவிட முடியாத அளவிற்கு உலகை கோடீஸ்வரர் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. தமிழக சூழலில் திரைத்துறை சார்ந்த இவர்களின் இழப்பு என்பது அவரவர் குடும்பங்களுக்கு மாத்திரமன்றி திரைத்துறைக்கே பேரிழப்பு என்பதுதான் நிகர்.

வெற்றி துஷ்யந்தன்


Add new comment

Or log in with...