வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் ஆசிரியை சுரநுதா | தினகரன்

வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் ஆசிரியை சுரநுதா

தலைநகரில் மட்டுமல்ல முழுநாட்டிலும் பல கல்விச் சாதானைகளைப் படைத்து கொண்டிருக்கும் தமிழ் பெண்கள் பாடசாலைகளில் ஒன்றுதான் வெள்ளவத்தையில் அமையப் பெற்றுள்ள சைவ மங்கையர் வித்தியாலயமாகும்.

இக்கல்லூரியின் மாணவிகளின் கல்விச் சாதனைகளுக்கு முதுகெலும்பாக விளங்குபவர்கள் இக்கல்லூரியின் ஆசிரியைகளாவர். அந்த வகையில் திறமையான வணிகக் கல்வி ஆசிரியையாகவும் மாணவத் தலைவியர் ஒன்றியத்தின் பொறுப்பாசிரியராகவும் திருமதி சுரநுதா ஜெயரூபன் திகழ்கின்றார். அவர் 11.05.2021 அன்ற தமது 20 வருட ஆசிரியப் பணியை விட்டுச் சென்றுள்ளார்.கடந்த 2 தசாப்தங்களாக இக் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் அவர்.

ஆசிரியை இக்கல்லூரியில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஊடக தொடர்புக்காக ஊடகவியலாளர்களை அழைப்பதுண்டு. சகல . நிகழ்வுகளையும் தேசிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் கல்லூரியின் சமூக வலைத்தளங்களில் பிரசுரிப்பதற்கு ஊடக அன்பர்களை அழைப்பவர். ஆசிரியத் தொழிலை தெய்வீகத் தொழிலாக மதித்து உற்சாகமாகவும் தனது பாடசாலை மாணவ சமூகத்திற்காகவும் அயராது உழைத்தவர் அவர்.

1977 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி சிவகுருநாதபிள்ளை மற்றும் விமலநாயாகி தம்பதியினரின் மகளாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பிறந்தவர் இந்த ஆசிரியை. தனது ஆரம்பக் கல்வியை யாழ் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூயிலும் இடைநிலைக்கல்வியை முதல் மூன்று வருடங்கள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலையிலும் கற்ற இவர், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கற்றல் நடவடிக்கையினை கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயத்தில் தொடர்ந்தார்.

பாடசாலைக் காலங்களில் விவாத மன்றத் தலைவியாகவும், மாணவத் தலைவியாகவும் திகழ்ந்தார். மேலும் நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், கவிதைகள், சிறுகதைகள் அறிவிப்புத்துறை என்பவற்றிலும் தடம் பதித்திருந்தார். தனது மாணவப் பருவத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு நன்மதிப்பு மிக்க மாணவியாகவும் நட்பு வட்டாரத்தில் சிறந்த தோழியாகவும் பாடசாலை மாணவர்களுடன் அன்பான சகோதரியாகவும் திகழ்ந்து பலரது மனங்களில் நீங்காத இடத்தினைப் பெற்றவர்.

வர்ததகப் பிரிவில் தனது இளநிலைப்பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். மேலும் கொட்டக்கல ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் பாடம் தொடர்பாக பயிற்சியினையும் (தமி்ழ் விசேடம்) பெற்றுக் கொண்டார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தினால் அறிமுகப்படுத்தப்ட்ட மனித உரிமை மற்றும் மனித வள டிப்ளோமாவையும் நிறைவு செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தான் கற்ற கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயத்தில் 2000ம் ஆண்டு தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 2001ஆம் ஆண்டு வைசமங்கையர் வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக இணை்ந்து கொண்டார். 2010 ஆண்டு தொடக்கம் வணிகக் கல்வியை பிரதான பாடமாகக் கொண்டு கற்பிக்கத் தொடங்கினார். சிறந்த ஆசிரியையாக பணியாற்றிய இவர் மாணவர்களை பாடசாலைக் கல்வியில் மட்டுமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஊக்குவிக்கத் தவறவில்லை.

2002ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலை விவாத மன்றம் மற்றும் வில்லுப்பாட்டு பொதுஅறிவுக்குழு என்பவற்றிக்கு பொறுப்பாசிரியராக கடமையாற்றினார். அதுமட்டுமன்றி அயல் பாடசாலை, அதிபர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் என்பவர்களுடன் நன்முறையில் பழகுவதுடன் இவ்வித்தியாலய செயற்பாடுகளுக்கும் அவர்களை இணைத்து பாடசாலைகளுக்கிடையிலான நல்லுறவையும் பேணி வந்தவர்களுள் ஒருவர்.

பாடசாலையின் மாணவிகளது ஒழுக்காற்றுக் குழுவிலும் அங்கம் வகித்தார். மாணவிகளது மனங்களில் நீங்காத இடத்தினைப் பெற்றுக் கொண்ட இவர், தனது 20 வருட ஆசிரியப் பணியை முடித்துக் கொண்டு செல்கின்றார்.

-

 

அஷ்ரப் ஏ சமத்

 


Add new comment

Or log in with...