வெள்ளரிப்பழச் செய்கைக்கு கிழக்கில் புகழ் பெற்ற கிரான்குளம் கிராமம்

உடல் வெப்பம் தணிக்கும் வெள்ளரிப்பழத்தை விளைவிக்கின்ற செய்கையாளர்களின் உள்ளத்தை குளிர்விக்க உதவிகள் வழங்கப்பட வேண்டும்

 

உடல் வெப்பத்தை தணிக்க இயற்கை சில பழங்களை எமக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் நாட்டின் பல இடங்களில் வெப்பம் நிலவும் இன்றைய காலத்தில் வெம்மை தணிக்கும் வெள்ளரிப்பழம் கிழக்கில் அமோக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெயில் காலத்தில் வெள்ளரிப்பழம் குறிப்பிட்ட சில கிராமங்களில் விசேடமாக செய்கை பண்ணப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இங்கு வெள்ளரிப்பழச் செய்கைக்குப் பேர் போன கிராமமாக மண்முணைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிரான்குளம் அமைந்துள்ளது.

வெள்ளரிப்பழம் என்றால் கிரான்குளம், கிரான்குளம் என்றால் வெள்ளரிப்பழம் என்றளவிற்கு மிகவும் பிரபல்யம் வாய்ந்தது கிரான்குளம். இது ஒரு விவசாயக் கிராமமாகும். அதிகமான விவசாயிகள் வீட்டுத் தோட்டம், சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்னர் கிரான்குளம் செனறிருந்தேன். இங்குள்ளவர்கள் எவ்வாறு இந்த வெள்ளரிப்பழச் செய்கையில் ஈடுபடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளச் சென்றிருந்தேன்.

அங்கு கடந்த 40 வருட காலத்திற்கும் மேலாக வெள்ளரிப்பழச் செய்கையில் ஈடுபட்டு வரும் தவராசா(61வயது) என்பவரின் தோட்டத்திற்குச் சென்றேன். தவராசா இப்படிக்கூறுகின்றார்...

'நான் நாற்பது வருடத்துக்கு மேலாக வெள்ளரிச் செய்கையில ஈடுபட்டு வாறன். இந்த முறை ஏழு ஏக்கரில் வெள்ளரிச் செய்கை செய்திருக்கின்றேன். கோடை காலத்தை மையமாக வச்சுத்தான் வெள்ளரிச் செய்கை செய்யிறது. மார்கழி மாசம் 15 ஆம் திகதிக்குப் பிறகு அல்லது தைப்பூஷம் அன்றைக்கு வெள்ளரி பயிரிட்டா சித்திரை, வைகாசிக்கு பழம் விற்பம். பயிரிட்டு மூன்று மாசத்தில் வெள்ளரிப்பழம் வந்திடும். பயிரிட்டு 45 நாளில் பிஞ்சு பிடிக்கும், அதிலிருந்து 45 நாளில் பழமாகி வெள்ளரிப்பழம் வெடிக்கத் தொடங்கிடும். தோட்டம் உழவு, பாத்தி கட்டுதல், பசளை வகை, பராமரிப்பு என்று ஒரு ஏக்கர் செய்யிறத்துக்கு நாற்பத்தி ஐயாயிரம் புடிக்கும். வெள்ளரிக்கு ஒரு பாத்தி கட்டுறத்துக்கு மட்டும் இருபது ரூபா கூலி எடுக்காங்க. நூறு பாத்திக்கு இரண்டாயிரம் ரூபா கொடுக்க வேணும். கஷ்டப்பட்டுத்தான் இந்த வெள்ளரிச் செய்கையை செய்யிறம். வெள்ளரிய பிஞ்சில் குளவிகள் தாக்குது. ஒரளவுக்கு வளர்ந்து வந்தா மயில், மைனா போன்ற பறவைகள் நாசமாக்குது. இதுகளிட்ட இருந்து தப்பி வந்தாத்தான் வெள்ளரியைக் காப்பாற்ற முடியும். பழமாகுற எல்லா வெள்ளரியும் நல்லா வராது. சிலது வெடிச்சி சிதறிப் போயிடும். நாங்க கஷ்டப்படுற அளவுக்கு நல்ல லாபம் என்று சொல்ல முடியாது” என்கிறார் கவலையுடன்.

“ஏதோ நட்டமில்லாம குடும்ப சீவியத்தைக் கொண்டு போக முடியுது. எங்களுக்கு தோட்டச் செய்கையை விட்டால் வேற வேலையும் தெரியாது. இந்த முறை கடும் வெயில் எறிக்கிறத்தால வெள்ளரிப் பழத்திற்கு கிராக்கி ஏற்பட்டிருக்குது. அரசாங்கம் எங்கள மாதிரி வெள்ளரிச் செய்கையில் ஈடுபடுற ஆட்களுக்கு சலுகை அடிப்படையில் விவசாய உதவிகளை மானியமாச் செய்ய வேணும். அரசாங்கம் அப்பப்ப எங்களப் போல விவசாயிகள குளிர வைச்சாத்தானே நாடு செழிக்கும்” என்றார் சிரித்துக் கொண்டு.

தவராசாவுக்கு உதவியாக அவரது மனைவி, மகன், மகள், பேத்தி ஆகியோர் தோட்ட வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். தற்போது தோட்டத்தில் ஒரு பழம் அதன் அளவைப் பொறுத்து 200 ரூபா, 150 ரூபா, 300 ரூபா என விற்கப்படுகின்றது. இப்பழங்களைப் பெற்றுக் கொள்ளும் வியாபாரிகள் அதனை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று நல்ல விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

காலத்திற்கு ஏற்ற பழச்செய்கையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளம் வெள்ளரிச் செய்கையில் பிரபல்யம் பெற்றுள்ளது. அரசாங்கம் இவ்வாறு நஞ்சற்ற இயற்கையோடு இணைந்த பழச் செய்கையாளர்களுக்கு மிகக் கூடிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வெள்ளரிப்பழச் செய்கையாளர் தவராசாவிடம் இருந்து நான் விடைபெற்று வருகையில் அவர் தனது தோட்டத்திலிருந்த இரண்டு வெள்ளரிப் பழங்களைப் பறித்து எனது மோட்டார் சைக்கிளில் கட்டி விட்டார்.

வெள்ளரிப்பழத்தின் வரலாறு பற்றி...

வெள்ளரிப்பழம் பற்றி வேதம் மற்றும் பழங்கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தளவுக்கு வெள்ளரிப் பழத்திற்கென்று தனிக் கதையுண்டு.

வெள்ளரிப்பழத்தின் தாயகமாக இந்தியாவுள்ளது. இந்தியாவில் இருந்துதான் கிரேக்கம், எகிப்து, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளது. இலங்கையில் சுமார் 3500 வருடங்களாக வெள்ளரிப்பழம் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. வெள்ளரிக்காயின் தாவரவியல் பெயர் 'குக்குமிஸ்சாட்டைவஸ்' என்பதாகும்

மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த சுமேரியா மக்களின் பேரரசனாக திகழ்ந்த உர்க் என்பவனைப் பற்றி கல்வெட்டுக்களிலே வடிக்கப்பட்ட உலகின் முதல் காவியம் எனப்படும் கில்காமேஷியல் என்பதில் வெள்ளரியை சுமேரிய மக்கள் உணவாகப் பயன்படுத்திய விபரங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலியர்கள் வெள்ளரியை பயிரிட்ட செய்திகள் உள்ளன. ரொபர்ட் டேனியல் என்பவர் அரேபியர்கள் வெள்ளரிக்கு அல்கித்தா எனப் பெயரிட்டு கோடையின் வெம்மை தணிக்க பலவிதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெருங்கவுசிகனார் இயற்றிய ‘மலைபடு கடாம்’ என்னும் பத்துப் பாட்டு நூலில்...

'முள்ளரித்தியற்றிய வெள்ளரி வெண்சோறு' எனக் குறிப்பிடுகின்றார். தோலில் காணப்படும் மெல்லிய முள்போன்ற பகுதியை நீக்கிய வெள்ளரியைக் கொண்டு சமைத்த வெண்சோறு என்பது பொருளாகும்.

முருகக் கடவுள் பெருமை பற்றி திருப்புகழ் இயற்றிய அணகிரிநாதர் தனது திருப்புகழில் விநாயகர் காப்பு செய்யுளில்...

'இக் கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புனெய்

எட்பொரிய வற்றுரையிள நீர்வண்

டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு

வெள்ளரிப்பழமிடிப்பல் வகை தனிமூலம்' எனப் பாடியுள்ளார்.

யஜீர் வேதத்தில் வெள்ளரிப்பழம் பற்றி ஒரு இடத்தில் சொல்லப்படுகின்றது.

'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸீகந்தி புஷ்டிவர்த்தனம்

உர் வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் முஷீயம மாம்ருதாத' என்ற மந்திரத்தில் உர்வாருகம் இவ – வெள்ளரிப்பழம் காம்பில் இருந்து விடுபடுவது போல என்பது இதன் பொருளாகும்.

கோடை காலத்தில் விளையும் வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கும், நீரிழிவு நோயாளர்களுக்கும் நல்லது. வெள்ளரிப்பிஞ்சு சித்தத்தை தணித்து குடலுக்கு குளிர்ச்சியையூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்கிறது, ஏரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது, தலைச்சுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரிப்பழத்துடன் பால், சர்க்கரை, சீனி சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும், வெள்ளரிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் அக்கினி அம்மை நோய் எம்மைத் தாக்காது என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தினால் தூர இடங்களில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் வெள்ளரிப் பழத்தினை கொள்வனவு செய்வதற்க்கு வருவதில்லை. இதற்கு கொரோனா சுகாதார விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதே காரணமாகும். இங்குள்ள விவசாயிகள் பசளை பெறுவதிலும் கஷ்டங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பசளை கேட்டுப் போனால் கடையிலும் இல்லை என்றே சொல்லப்படுவதாக கூறுகின்றனர். இதுவரை எந்தவொரு உதவிகளும் தமக்கு வழங்கப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். வெள்ளரிப்பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என வெள்ளரிப்பழச் செய்கையாளர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். மருத்துவ குணம் கொண்ட வெள்ளரிப் பழத்தின் மகத்துவத்தை அறிந்தவர்கள் காலத்துக்கேற்ப வெள்ளரிச் செய்கையில் ஈடுபட்டு மக்கள் வெம்மை தணித்து வருகின்றார்கள். கிழக்கில் வெள்ளரிச்எசெய்கையை மேலும் ஊக்குவிக்க அரசாங்கம் இவ்விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை சலுகை அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

 

 


Add new comment

Or log in with...