பெண் மத்தியஸ்த்தர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு | தினகரன்

பெண் மத்தியஸ்த்தர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையுடன் பெண் மத்தியஸ்த்தர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு ஒன்று கால்பந்தாட்ட மத்தியஸ்த்தர் திணைக்களத்தினால் கம்பஹா கால்பந்தாட்ட பயிற்சி மத்திய நிலையத்தில் ஏப்ரல் 23,24, 25ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டது. இச்செயலமர்வில் கால்பந்தாட்டத்தின் புதிய விதிகள் தொடர்பான விளக்கங்களுடன் பிரயோகப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கையில் பெண்களுக்கான கால்பந்தாட்டத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் பல போட்டிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. இப்போட்டிகளை மத்தியஸ்த்தம் வகிக்க இச்செயலமர்விலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற பெண் மத்தியஸ்த்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இச்செயலமர்வில் பிரயோகப் பயிற்சிப் போதனாசிரியராக அநுர சில்வா, தொழில்நுட்பப் போதனாசிரியர்களாக பீ.எல்.பீ. பீரிஸ், எம். வடிவேல் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர். வளவாளர்களாக டியூடர் மற்றும் ஆப்டீன் ஆகியோர் கடமையாற்றினர்.

இலங்கை கால்பந்தாட்ட மத்தியஸ்த்தர் சங்கத் தலைவர் தேசப்பிரியவின் தலைமையில் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் அகில இலங்கை ரீதியாக 40 பெண் மத்தியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.

திருகோணமலை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...