தமிழகத்திலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்த நால்வர் யாழில் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு பிரவேசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.  

தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் அரச்சலூர் முகாமில் வசித்து வந்த தாய், மகள், 02 பேரப்பிள்ளைகள் என 04 பேர் படகு மூலம் இலங்கை வந்துள்ளனர்.

சகாயராணி வயது 60, மகள் மேரி லவுரா வயது 35, இவரது பிள்ளைகள் கௌரி யல்றிசாந்த் வயது 09, டிலான் லியோ நட் வயது 07 ஆகியோரே கடந்த 10ஆம் திகதி இரவு புறப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை யாழ். குருநகர் பகுதியை வந்தடைந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

படகில் மன்னார் பகுதிக்கு வந்து பின்னர் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவர்களுக்கு நேற்று (13) பி.சி.ஆர் பரிசோனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதார தரப்பினரும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேரி லவுராவின் கணவர் அருள் தீபன் பிரான்சில் உள்ளார். மேரிலவுரா ஏற்கனவே பிரான்ஸ் செல்வதற்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு தயார் செய்த முறைப்பாட்டில் இவருக்குப் பதிலாக இவரது கணவரின் தம்பி நிஷாந்தன் இன்னும் கோயம்பத்துர் மத்திய சிறையிலிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  


Add new comment

Or log in with...