ரமழான் கற்றுத்தந்த பாடங்களை வாழ்வில் கடைபிடிப்போம் | தினகரன்

ரமழான் கற்றுத்தந்த பாடங்களை வாழ்வில் கடைபிடிப்போம்

இஸ்லாமியர்கள் வளர்க்கப்படும் பயிற்சிப் பட்டறைகளுள் நோன்பு எனும் பயிற்சிப்பட்டறை மிகவும் மகத்தானதொன்றாகும். புனித மிகு ரமழான் மாதத்தில் நோன்பு எனும் பள்ளியில் ஒரு முஸ்லிம் கற்ற பாடங்கள் ஏராளம். அவற்றை ஒரு முஸ்லிம் ரமழானில் மட்டுமல்லாமல் எல்லாக் காலங்களிலும் நடைமுறைப்படுத்துவதினூடாக ஈருலக சௌபாக்கியங்களையும் அடைந்துகொள்ளலாம்.  

அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.... 

# முதல் பாடம்;  ரமழான் மாதம் எமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுத்தது. பொறுமையைப் பொருத்தவரை அது இஸ்லாமிய வணக்க வழிபாட்டுச் செயல்களில் மகத்தானதொன்றாகும். அல்லாஹ்வின் முன்னிலையில்  ஓர் அடியான் நோன்பு நோற்ற நிலையில் பசிவந்தும் சாப்பிடாமலும், தாகம்வந்தும் அருந்தாமலும் பொறுமையை மேற்கொள்கிறான். இச்செயல் அவனுக்கு பொறுமை என்ற நற்குணத்தை பழக்குகிறது.
ஒட்டு மொத்த நன்மைகளும் பொறுமையில்தான் தங்கியுள்ளன. அல்லாஹ் கூறுகிறான்: 
'நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும்.' (ஸுமர் 39:10) 

# இரண்டாவது பாடம்;  ரமழான் மாதத்தில் நாம் அல்லாஹ்வுக்காக நமது நாவு உட்பட ஏனைய உடலுறுப்புக்களையும் மனஆசைகளையும் கட்டுப்படுத்தி அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் உணர்வைத் தந்தது.  

'நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.' (அல்பகரா 2:183) 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகிறான் ' என்று அல்லாஹ் கூறினான். (புகாரி:7492) 
# மூன்றாவது பாடம்;  ரமழான் மாதம் எங்களுக்கு வழிபாட்டையும் அதன் இனிமையையும் கற்பித்தது. நோன்பு நோற்பது, தொழுவது, குர்ஆனை ஓதுவது போன்ற வணக்கங்களைப் பழக்கியது.  

'நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமழான் மாதம் நோன்பு நோற்பவரின், நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (புகாரி: 37,38) 
'ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.' (புகாரி:6) 

எனவே,  ஏனைய இராக்காலங்களில் அல்லாஹ்வைத் தொழுவதும், பகற்காலங்களில் நோன்பிருப்பதும் அல்குர்ஆனை அதிகதிகமாக ஓதுவதும்ரமழானுக்குப் பின்னுள்ள காலங்களிலும் தொடரவேண்டும்.  

# நான்காவது பாடம்: அல்லாஹ் எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உயர்ந்த உணர்வை ரமழான் நமக்குத் தந்தது அதன் மக்ததான செயற்பாடாகும்.  

நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் (அறிவாலும், ஆற்றலாலும்) உங்களுடன் இருக்கிறான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்யும் செயல்களையெல்லாம் நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்றான்.(அல்ஹதீத் 57:4) 

ஏனெனில் ஒரு நோன்பாளி தன் மனம் விரும்புவது போல் நடக்கமுடியுமாக இருந்தும், மறைவாக உண்ணவோ பருகவோ வேறு அனுமதிக்கப்பட்ட தாம்பத்திய உறவையோ செய்துகொள்ள முடியுமாக இருந்தும் அல்லாஹ் அவற்றைத் தடை செய்திருக்கிறானே, அவன் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறானே என்ற ஒன்றுக்காக மட்டுமே அவர் அவற்றை விட்டுவிடுகிறார்.  

# ஐந்தாவது பாடம்;  இஸ்லாம் மார்க்கம் மிகவும் எளிதானது, அதன் போதனைகள் எல்லோராலும் பின்பற்றப்பட முடியுமானவை என்ற ஒரு பாடத்தையும் ரமழான் மாதம் நமக்கு கற்றுத்தந்தது. ஏனெனில் எந்தவோர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டதை செய்யக்கூறி அல்லாஹ் நிர்ப்பந்திக்கமாட்டான். அந்த வகையில் நோன்பு என்ற வணக்கத்தைக்கூட, சக்தியுள்ளவர் நோற்கவேண்டும். சக்தியற்றவர் ரமழானில் நோன்பு நோற்காமல் இருந்துவிட்டு ஏனைய காலங்களில் அதை நோற்கலாம், அல்லது குற்றப்பரிகாரமாக ஏழைக்கு உணவளிக்கலாம் என்று சட்டத்தை இலகுபடத்தியுள்ளான்.  

ஆகவே,  உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்றுவிடவும்; எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், மற்ற நாட்களில் ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று) விடவும் அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான்; மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை. (அல்பகரா 2 :185) 

# ஆறாவது பாடம்;  ரமழான் மாதம் ஏழை எளியவர்களுக்கு தர்மமளிக்க வேண்டும் அவர்களின் கஷ்டங்களை உணரவேண்டும் என்றவொரு பாடத்தையும் கற்றுக் கொடுத்தது.  

'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி (ஸல்) மிக அதிகமாக வாரிவழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.' (புகாரி:6) 

ஏனென்றால், ஒருவன் நோன்பு நோற்றுக் கொண்டு, பசியின் வருத்தத்தை ருசிக்கும் போதுதான், ஏனைய காலங்களில் ஆதரவற்ற ஏழைகள் பசியால் வாடும்போது அவர்களுக்கு ஏற்படும் வருத்தம் எத்தகையது என்பதை உணரத்தொடங்குகிறான். அதன் விளைவாக அவன் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஒத்தாசைபுரியவும் முன்வருகிறான். இது தக்வா எனும் இறைபக்தியின் பண்புகளில் ஒன்றாகும். 

ரமழானுக்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது? வல்ல அல்லாஹ் ரமழானின்  மட்டுமல்லாமல் ஏனைய அனைத்து மாதங்களினதும் நாட்களினதும் இறைவன்தானே! ஆகவே, காலங்கள் சூழ்நிலைகள் எவ்வாறு மாறினாலும், ஏற்ற இறக்கமாக இருந்தாலும், ஒரேயோர் அடிப்படைக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். அதுதான் அல்லாஹ்வை அஞ்சி, பயந்து பக்தியுடன் நடப்பது!

யா அல்லாஹ்! நீயோ தாராளமாக மன்னிப்பளிப்பவன்! மற்றும் மன்னிப்பளிப்பதை விரும்புகிறவன்! எனவே எங்களை மன்னித்தருள்வாயாக! ஆமீன்!

மௌலவி இல்ஹாம் ஜவ்ஹர்
சிரேஷ்ட விரிவுரையாளர், அல் -ஸலாஹ்
அரபுக்கல்லூரி, சீனன்கோட்டை, பேருவளை.


Add new comment

Or log in with...