சிறப்புகளுக்குரிய சுபதினமான அட்சய திருதியை வெறும் வர்த்தகமாக மாற்றப்பட்டுள்ள விசித்திரம்!

- தங்கத்தை வாங்கி குவிப்பதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதெல்லாம் அபத்தமான நம்பிக்கை

லக்ஷ்மி தேவியின் கடாட்சம் கிடைக்கும். ஆண்டு முழுவதும் செழிப்பை அள்ளி வழங்கும். பொன்மயமான அக்ஷய திருதியை திருநாளில் சுபநேரத்தில் தங்கம் கொள்முதல் செய்வதால் இவைகள் எல்லாம் கிடைக்கும் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இன்று அட்சய திருதியை சுபதினத்தை எமது நாட்டிலும், தமிழகத்திலும் பெரும் வர்த்தகமாக மாற்றி விட்டனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு போன்ற பெரும் நகரங்களில் காணப்படும் நகை வர்த்தக நிலையங்களில் அட்சய திருதியை சுபநாளில் தங்கம் கொள்முதல் செய்வதற்காக மக்கள் கும்பலாக அலைமோதுவதைக் காணலாம். ‘பொன்னகை வாங்க பொன்னான நேரம் அட்சய திருதியை கொண்டாட்ட நாள்’ என மக்கள் மத்தியில் வர்த்தக சமூகம் பதிய வைத்து விட்டது.

இலங்கையில் அட்சய தினத்தை அக்ஷய திரிதியை எனத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இத்தினத்தை பழைய சோதிட நூல்கள் ‘அட்சய திருதியை’ என்றே கூறுகின்றன. உலகின் பிறந்த நாள் எப்போது என கூகுளில் தேடிப் பாருங்கள். உங்களுக்கு பதில் கிடைக்குமா என்பது சந்தேகமான விடயமாகும்.

ஆனால் புராண நூல்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதன் மீது படிந்திருக்கும் தூசியை தட்டி விட்டு பக்கங்களை புரட்டுங்கள். உலகத்தின் ‘பேத் டே’ தினம் தெரியவரும். அதுதான் உலகம் பிறந்தநாள் அட்சய திருதியை என்ற விடை கிடைக்கும்.

இவ்வாறு அட்சய திருதியையொட்டிய விசேட தகவல்கள் எத்தனையோ காணப்படுகின்றன. அட்சயம் என்றல் வளர்வது, வளம், செல்வம், செழுமை, வள்ளல் என பலதரப்பட்ட கருத்துக்களை பல நூல்கள் தெரிவிக்கின்றன.

மாதத்தில் இருமுறை பிரதமை, அமாவாசை, பௌர்ணமி எனப்படும் திதிகளின் வரிசையில் சித்திரை மாத வளர்பிறையில் (அமாவாசைக்கு மூன்றாவது நாள்) வரும் திருதியைதான் அட்சய திருதியை. கிருத, திரேதா, துவாபர, கலி எனப்படும் நான்கு யுகங்களும் நிறைவு பெற்று முடிந்ததும் உலகம் அழிந்துவிடும் இந்து மதம் சொல்லி விட்டது. இந்து மதமானது வேதம் என்பது இன்னும் உலகம் தெரிவிக்காத தகவலாகும்.

இவ்வுலகம் ஒருமுறை அழிவை அனுபவித்த பின்னர் சித்திரை மாதத்து வளர்பிறை திருதியை நாளொன்றில் ஆண்டவன் அட்சயம் என்று சொல்ல மீண்டும் உலகம் பிறந்தது. அன்றைய நாள்தான் அட்சய திருதியை. அமுதம் தேடி பாற்கடல் கடையப்பட்ட போது அதிலிருந்து மகாலட்சுமி அவதரித்த தினமும் அட்சய திருதியை தினத்தன்றுதான்.

மகாலட்சுமி இன்றைய தினம் அவதரித்ததால் இன்று மகாலட்சுமி பூஜை செய்தால் பணம், பொருள், நகை எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் வளர்த்துக் கொண்டனர். இதற்காக ஒரு குண்டுமணி எடையைக் கொண்ட தங்கமாவது வாங்கினால் செல்வ வளம் வீட்டில் தேங்கும் என்பது பல காலமாக வாழும் நம்பிக்கையாகும். திரு என்பதன் அர்த்தம் மகாலட்சுமி என்பதை குறிப்பதாகும். அதனால்தான் த்ரீதியை, திருதியை ஆனது.

பத்தினியான பாஞ்சாலி தன் துகிலை துச்சாதனன் உருவத் தொடங்கியதும் பகவானை நினைத்து 'ஆபத்பாந்தவா' என கூக்குரலிட்டு அலறினாள். பாஞ்சாலியின் அலறல் சத்தம் கேட்டு 'அட்சயம்' என கிருஷ்ணபரமத்மா கூவ திரௌபதியின் ஐந்து முழம் கொண்ட புடைவை, ஆயிரம் முழத்துக்கும் மேல் நீண்டு கொண்டே போனது. இதனால் பாஞ்சாலி அவமானப்படாது அவள் மானம் காப்பாற்றப்பட்டது. அட்சயம் என்ற சொல்லால் பாஞ்சாலியின் மானம் காப்பாற்ற உதவிய புடைவையை மறக்காது இருப்பதற்காக, அட்சய தினத்தில் புத்தாடைகள் வாங்கினால் புத்தாடை சேரும் என்ற ஐதீகம் இன்றும் பெண்கள் மத்தியில் வாழ்கிறது.

கிருஷ்ண பகவானை காண குசேலர் நெடுந்தூரம் நடந்து சென்றார். துவாரகை குசேலர் கண்ணில் தென்படவில்லை. கொடுமையான வெயிலில் வீதியின் நடுமையத்தில் நடந்து சென்றார். காரணம் ஒரு பூச்சி, புழு கூட தன் பாதம் பாட்டு இறந்து விடக் கூடாது என்ற எண்ணத்துடன் தன் அழுக்கு வேட்டியில் எதை முடிந்து கொண்டு போனார் தெரியுமா? நெல் இடியல் உண் பொருளான அவல் கொண்டு சென்றார்.

அவலை பெற்றுக் கொண்ட கிருஷ்ணர் ஆவலாக அவலை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பின் மகிழ்ச்சியில் ‘அட்சயம்’ என்றார். அதன் காரணமாகத்தான் இன்றும் அட்சய திருதி தினத்தில் பலரும் அவல் கொள்முதல் செய்கின்றனர்.

குபேரனுக்கு செல்வ வளம் கிடைத்த தினம், ஆதி சங்கரர் கனகதாரா பாடி தங்கமழை பொழிந்த நாள், வியாச முனிவர் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுத ஆரம்பித்த நாள், பாண்டவர்களுக்கு சூரியன் அட்சய பாத்திரம் வழங்கிய நாள், சிவபெருமான் பசியை அன்னபூரணி தீர்த்துள்ள தினம், இவை அனைத்தும் இடம்பெற்ற சிறப்பு தினம் அட்சய திருதியை தினத்திலாகும்.

இத்தினத்தில் கல் உப்பு, மஞ்சள், பச்சை கற்பூரம் கொள்முதல் செய்வது மிகச் சிறப்பானதாகும். கல் உப்பில் தீபம் ஏற்றுவது மூலம் செல்வம் பெருகும் எனக் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட ஏழை எளியவர்களின் பசியைப் போக்குவது பெரும் புண்ணியமாகும்.

பசுவுக்கு பழம், அகத்தி கீரை வழங்குவது, எல்லாவற்றையும் விட மனமகிழ்ச்சிக்கு பெரிய செல்வத்தை வழங்குமாம். இன்றைய தினம் எதையுமே கொள்முதல் செய்ய இயலாவிட்டால் நல்லதை பேசுங்கள். அது உங்கள் வாழ்நாள் முழுவது அட்சயமாய்த் தொடரும்.

கே.பி.பி. புஷ்பராஜா
(வடகொழும்பு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...