வருமுன் காப்போம் என்பதே இன்று எம்மிடமுள்ள ஒரேயொரு ஆயுதம்!

 

நோன்புப் பெருநாள் காலத்தில் மிகுந்த அவதானமும், முன்னெச்சரிக்கையும் பேணுமாறு கண்டிப்பான அறிவுறுத்தல்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் பள்ளிவாசல் நிருவாகங்களுக்கு இன்று பிரதானமான கடமைப் பொறுப்புகள்

எமது நாட்டில் தற்போது உருவாகியுள்ள கொரோனாவின் மூன்றாவது அலைத் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கமும், சுகாதாரத் துறையினரும் மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம். அவ்வாறு மக்கள் ஒத்துழைப்பு வழங்கா விட்டால் பாரியளவு மனித அழிவுகளை சந்திக்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்படும்.

முஸ்லிம்களின் புனித றமழான் நோன்பு மற்றும் நோன்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு மக்கள் இம்முறை அமைதியான முறையில் தத்தமது வீடுகளில் பெருநாளை கொண்டாடுவது பொருத்தமாகும்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் நிருவாகிகளுக்கு வணக்க வழிபாடுகள், நோன்பு பெருநாள் பண்டிகை உட்பட இன்றைய செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்ற சுற்றுநிரூபத்தை அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிவுறுத்தல்களை அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அமுல்படுத்துமாறு பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரை அந்தத் திணைக்களம் பணித்துள்ளது.

கொவிட் 19 பரவல் தொற்று ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு செயற் திட்டங்கள் முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக பள்ளிவாசல் நிருவாகிகள் ஊடாக அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு செயற் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு ‘வருமுன் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப்பின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக நடைபெற்று வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.றிபாஸ், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் மற்றும் பள்ளிவாசல்களின் நிருவாகிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை ஒவ்வொரு பள்ளிவாசலின் ஊடாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றைய நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடப்பதற்கு பள்ளிவாசல்களின் நிருவாகிகள் தத்தமது பிரதேசங்களில் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களைப் பொறுத்த வரையில் பல பிரதேசங்களில் இருந்தும் வெவ்வேறு நபர்கள் வணக்க வழிபாடுகளுக்கு வருவது வழக்கம். இதனைக் கருத்திற் கொண்டு கொவிட் கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக வணக்க வழிபாடுகளில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கு எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல்களின் நிருவாகிகள் அனுமதியளிக்கக் கூடாது என்பதே இத்திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும். நோன்புப் பெருநாள் தினத்தன்று பள்ளிவாசல்களை மூடி விடுமாறும், மக்களை தங்களது வீடுகளில் குடும்பத்தாருடன் தொழுகையில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் இன்றைய அலை மிக வேகமாகப் பரவக் கூடியது. மூன்றாவது அலையில் உயிரிழப்புகளின் வீதம் கூடுதலாக காணப்படுவதால், நாம் முன்னரை விட தற்போதைய காலகட்டத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கொரோனாவின் மூன்றாவது அலை எமக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இளவயதினரையும் தாக்கக் கூடியது இந்த திரிபடைந்த வைரஸ். எனவே நாம் அனைவரும் மிகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம்.

பாரதூரமான ஒரு நிலைமை எமது நாட்டிலும் ஏற்படாமல் தடுப்பதென்றால் ‘வருமுன் காப்போம்’ என்ற ஆயுதம்தான் எமது கைகளில் இருக்கின்றது. இதை விட எந்த ஒரு வேறு ஆயுதமும் எமது கையில் இல்லை. தயவு செய்து யாருமே அலட்சியமாக இருக்க வேண்டாம். தொழுகைக்காக வருகின்றவர்கள் பள்ளிவாசல்களின் நிருவாகிகளின் ஊடாக வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி நடப்பது எம் எல்லோர் மீதுள்ள கடமையாகும் என்று முஸ்லிம் பிரமுகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அது மாத்திரமன்றி வணக்க வழிபாடுகள் மற்றும் நாளாந்த செயற்பாடுகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்கின்றனரா என்பதை அவதானிக்கின்ற விடயத்தில் பள்ளிவாசல் நிருவாகிகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும். தகுதி, தராதரம் பாராது நடந்து கொள்ள வேண்டும். சட்டதிட்டங்களை மதிக்காமல் செயற்படுகின்றவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பார்க்காமல் சுகாதாரத் துறையினருடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலாக உள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை மீறி செயற்படுகின்ற பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு போதும் பின்னிற்காது என்பதையும் பள்ளிவாசல் நிருவாகிகள் தர்மகர்த்தாக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை, கொவிட் கட்டுப்பாட்டு சட்டதிட்டங்களை மதிக்காமல் செயற்படுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிவாசல் நிருவாகிகள் சுகாதார அதிகாரிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஊடாக நடவடிக்கை எடுக்க ஒரு போதும் தயங்கக் கூடாது. இந்த விடயத்தில் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சுகாதாரத் துறையினர் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர்.

முஸ்லிம்கள் இம்முறை தத்தமது குடும்பத்தவருடன் வீட்டிலிருந்தவாறே நோன்பு பெருநாள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறும், தேவையற்ற பிரயாணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கண்டிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. வீதிகளில், மைதானங்களில், கடற்கரைப் பிரதேசங்களில் கூடியிருத்தல் போன்ற தேவையற்ற விடயங்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். அரசாங்கத்தினதும் சுகாதாரத் துறையினரதும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி நடப்பது அனைவரதும் கடமையாகும்.

பொலிசாரின் சட்ட நடவடிக்கைக்குப் பயந்தும், சுகாதார அதிகாரிகளுக்கு அஞ்சியும் முகக்கவசம் அணிந்து கொள்வதால் பயனில்லை. அவர்களிடமிருந்து தப்பிக் கொள்வதற்காக கொவிட் 19 சட்டதிட்டங்களை பின்பற்றி நடப்பதையும் கைவிட வேண்டும். அவ்வாறு நடப்பீர்கள் என்றால் மக்கள் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்படும். நாட்டில் கொரோனா தொற்றை இல்லாதொழிப்பது என்றால் இந்த நாட்டிலுள்ள பிரஜைகள் அனைவரது ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகின்றது.

எமது சமூகத்தினதும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நன்மை கருதி கொரோனா தொற்றை எமது நாட்டிலிருந்தும் பிரதேசங்களிலிருந்தும் முற்றாக ஒழிக்க நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். எனவே கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கா விட்டால் நாம் பாரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இதுவே பொறுப்பு வாய்ந்த நலன்விரும்பிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்டிப்பான அறிவுறுத்தலாக உள்ளது.

ஐ.ஏ. ஸிறாஜ்...

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...