களுத்துறை மாவட்டத்தில் எட்டு இடங்களில் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையங்கள் | தினகரன்

களுத்துறை மாவட்டத்தில் எட்டு இடங்களில் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையங்கள்

மேலும் 1300 பேருக்கு மருத்துவ வசதியளிக்கும் ஏற்பாடுகள்

நாட்டில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், களுத்துறை மாவட்டத்தில் எட்டு புதிய தற்காலிக கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் இம்மாவட்டத்தில் தற்போதுள்ள கொரொனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை வசதிகள் மேலும் ஆயிரத்து முன்னூறு பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளன.

களுத்துறை மாவட்டத்துக்கான எட்டு தற்காலிக இடைநிலை சிகிச்சை நிலையங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விஷேட கலந்துரையாடல் துறைமுக கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையில் அண்மையில் களுத்துறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. களுத்துறை மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே, மேல்மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் காமினி தர்மசேன, களுத்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக பிரியன்த உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

களுத்துறை பஸ்தூன்ரட கல்விக் கல்லூரி, ஹொரண வேவல சிறீபாலி மண்டபம், பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம், பாணந்துறை கொறகான சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை திணைக்கள கட்டடம், மில்லனிய இரட்சணிய சேவைகள் நிலையம் உள்ளிட்ட எட்டு இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் கொரொனா தொற்றுக்கான தற்காலிக சிகிச்சை நிலையங்களாக செயற்பட்டு வருவதுடன், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள தொற்றாளர் அதிகரிப்புக்கு முடிந்தளவில் சவாலுடன் முகம் கொடுப்பதற்கான ஏற்பாடாகவே புதிய தற்காலிக மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களின் நிலைமைகளை ஆராய்ந்து தேவையான படுக்கை மற்றும் வசதிகளும் வாழங்கப்படவுள்ளன. இந்த தற்காலிக சிகிச்சை நிலையங்கள் அவற்றை அண்மித்த வைத்தியசாலையின் வழிநடத்தலில் செயல்படவுள்ளன. மேலும், ஆயுர்வேத வைத்தியர்களின் உதவிகளையும் பெற்றுக் கொண்டு சிகிச்சை நிலையங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம கடுகஹஹேன பிரதேச வைத்தியசாலையும் கொரொனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக்கப்படவுள்ளது. அதிகாரிகள் சகிதம் வைத்தியசாலையைப் பார்வையிட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன புதிய கட்டில்கள் மற்றும் முன்னேற்பாடுகளுக்கான அனுமதியையும் வழங்கியுள்ளார்.

எம்.எஸ்.எம்.முன்தஸிர்...?

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...