கொரோனா விடயத்தில் மக்கள் கற்க வேண்டிய அனுபவப் பாடம் | தினகரன்

கொரோனா விடயத்தில் மக்கள் கற்க வேண்டிய அனுபவப் பாடம்

உலகின் சில நாடுகளில் கொவிட்19 தொற்று பரவுதலின் அலையானது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதன் முதலாக உருவெடுத்ததைப் பார்க்கிலும், தற்போதைய மறுஅலைத் தாக்கம் மிகத் தீவிரமாகவே உள்ளது. இந்தியாவில் தற்போது கொவிட் தொற்று பரவுகின்ற வேகமும், அங்கு சம்பவிக்கின்ற உயிரிழப்புகளும் இதற்கான உதாரணங்களாகும்.

கொரோனாவின் முதலாவது அலை உருவெடுத்து தணிந்து போனதன் பின்னர் மற்றொரு அலை இவ்வாறு உருவெடுக்குமென்று இந்தியா சற்றுமே எதிர்பார்த்திருக்கவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தொடருமெனவும், பெருமளவானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டிருப்பதனால் கொரோனா முன்னரைப் போன்று பாரியளவில் தலையெடுக்காதென்றுமே இந்தியா நம்பியிருந்தது.

ஆனால் அந்ந நம்பிக்கை வேறு விதமாக அமைந்து விட்டது. இந்திய நாடு தற்போது சந்தித்துள்ள இழப்புகள் விபரிக்க முடியாதவை ஆகும். நாளாந்தம் பல இலட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு இலக்காகின்றனர். நாளாந்த உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் சம்பவிக்கின்றன. வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. மரணமடைவோரின் பிரேதங்களை தகனம் செய்வதற்கே உறவினர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்தியாவுக்கு இது நெருக்கடியான வேளை ஆகும். மக்கள் ஒவ்வொருவரும் அவதானமாக இருந்திருப்பார்களேயானால் இவ்வாறான பெரும் துன்பியல் கட்டத்தை இந்தியா சந்திந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. அரசாங்கங்கள் எவ்வாறுதான் அவதானமாக செயற்படுகின்ற போதிலும், நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாது போனால் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்துவதென்பது முடியாத காரியமென்பதற்கு இந்திய நிலைமையானது உதாரணமாகும்.

அதேசமயம் கொரோனா நோயாளர்களுக்கு சிசிச்சையளிப்பதற்கான ஒக்சிஜன் சிலிண்டர்களையும், தடுப்பூசிகளையும் போதியளவில் கையிருப்பில் வைத்திருப்பதிலும் இந்தியாவின் பல மாநிலங்கள் தவறியுள்ளன. இன்றைய அதிகரித்த உயிரிழப்புகளுக்கும், நெருக்கடிக்கும் அவையும் காரணங்களாகும்.

இந்தியாவின் அயல்நாடாக இலங்கை உள்ள போதிலும், அவ்வாறான பாரதூரமான நிலைமை இங்கில்லை. ஆனாலும் இலங்கையின் இன்றைய கொரோனா பரவல் நிலைமையானது ஆரோக்கியமானதாக இல்லை. முன்னர் உருவெடுத்த அலைகளை விட இன்றைய அலைத் தாக்கம் மிகவும் வேகமாகவே உள்ளது. நாளாந்தம் புதிதாக தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையானது ஆயிரத்தையும் தாண்டியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் முன்னரை விட இப்போது அதிகமாகும்.

இந்த நிலைமையானது உண்மையிலேயே ஆபத்தான அறிகுறியாகும். இன்றைய பரவலின் வேகத்தை எவ்வாறாவது கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையேல் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டு விடக் கூடும். மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதில் நெருக்கடி ஏற்படுமானால் நிலைமையை வழமைக்குக் கொண்டு வருவதில் திண்டாட வேண்டியிருக்கும். எனவே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாட்டின் ஒவ்வொரு தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.

முன்னைய அலைகளைப் பார்க்கிலும் இன்றைய அலை தீவிரமாக இருப்பதற்கான காரணங்களை மருத்துவ நிபுணர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். கொரோனாவின் திரிபடைந்த வைரஸின் வீரியத் தன்மையே இதற்கான பிரதான காரணமாகும். பிரித்தானியாவில் பரவிய திரிபடைந்த வைரஸின் வகையைச் சேர்ந்த கொரோனா வகை நுண்ணுயிரியே இப்போது இலங்கையில் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னர் இங்கு பரவிய வைரஸைப் பார்க்கிலும் இரண்டரை மடங்கு வேகத்துடன் பரவக் கூடிய தன்மையை இன்றைய திரிபடைந்த வைரஸ் கொண்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது காற்றில் பரவக் கூடிய தன்மையை திரிபடைந்த வைரஸ் அதிகம் கொண்டுள்ளது. எனவேதான் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையானது நாளாந்தம் ஆயிரக்கணக்காக அதிகரித்திருக்கின்றது.

தொற்றாளர்கள் அதிகரிப்பதனால்தான் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

அதேசமயம் கடந்த சித்திரைப் புத்தாண்டு மற்றும் எதிர்வரும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்காக மக்கள் புடைவைக் கடைகளில் முண்டியடித்து ஆடைகளை வாங்கியதாலும், கொவிட் தொற்று என்பதை முற்றாகவே மறந்து செயற்பட்டதனாலும் இன்று இலங்கையில் இவ்வாறானதான அலையொன்று மீண்டும் உருவெடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் எச்சரிக்கையூட்டி வந்துள்ள போதிலும், மக்கள் அதனை அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் இதுவாகும்.

அந்த அலட்சியத்தினால் மக்கள் ஒவ்வொருவருக்கும் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், இழப்புகளையும் எண்ணிப் பார்ப்பது அவசியம். அனைத்து தரப்பினருமே பொருளாதார பாதிப்புகள் உட்பட பலவிதத்திலும் இழப்புகளை மீண்டும் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியிலும் பெரும் பாதிப்பு எதிர்நோக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று தணிந்தவுடன் எம்மை விட்டு முற்றாக நீங்கி விடப் போவதில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அது தணிவதும், மீண்டும் வேகமெடுப்பதுமாகவே இன்னும் சில வருடங்களுக்கு தொடரப் போகின்றது என்பதே மருத்துவ அறிவியலாளர்களின் கருத்தாகும். கொவிட் அச்சுறுத்தல் உலகை விட்டு முற்றாக நீங்குவதற்கு சில வருடங்கள் செல்லக் கூடும் என்பதை நினைவில் கொண்டு அதியுச்ச விழிப்புணர்வைப் பேணுவதே விவேகமாகும்.


Add new comment

Or log in with...