சமூகத்தில் உயர்வாக போற்றப்படும் மனிதாபிமானம் மிக்க தாதியர் பணி | தினகரன்

சமூகத்தில் உயர்வாக போற்றப்படும் மனிதாபிமானம் மிக்க தாதியர் பணி

உலக தாதியர் தினம் இன்று

சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து இன்றுஉலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா -மற்றும் யுத்த கால வைத்திய சேவைகள் வரை ஒவ்வொரு இடத்திலும் மருத்துவ தாதியரின் சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் அருவருப்புகளைக் கூட கவனத்திற் கொள்ளாமல் மனித உணர்வோடு அணுகி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதாகும். இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவு கூர வேண்டியது அவசியம்.

வெள்ளைச் சீருடை என்றாலே சேவையின் அடையாளமாக தாதியர்கள்தான் நினைவுக்கு வருவர். பொறுமையும், சகிப்புத் தன்மையும் இப்பணியின் இரு கண்கள். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும மே மாதம் 12ம் திகதி சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பையும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவு கூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவு கூருந்து வருகிறது.

1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இத்தினத்தை செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர் நிராகரித்தார். இருப்பினும் 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவு கூர முடிவு செய்யப்பட்டது.

தாதியார்தினம் என்று வரும் போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale) நினைவு கூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.

தாதிகளுக்கான பயிற்சிப் பாடசாலையையும் இவரே முதலில் ஆரம்பித்தார். 'விளக்கேந்திய சீமாட்டி', 'கை விளக்கேந்திய காரிகை' (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளிவிபரவியலாளரும் ஆவார். பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள்.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

எனவே இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும். இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பொறுப்பற்ற தாதியர்களின் கொடூர முகத்திரைகள் அவ்வப்போது கிழித்தெறியப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக தாதிய தொழில் உயர்வாகவே போற்றப்படுகிறது.

என். ஹரன்...
(பனங்காடு)


Add new comment

Or log in with...