தலைப்பிறை தென்படவில்லை; நாளை மறுநாளே நோன்புப் பெருநாள் | தினகரன்

தலைப்பிறை தென்படவில்லை; நாளை மறுநாளே நோன்புப் பெருநாள்

ஹிஜ்ரி 1442 இஸ்லாமிய வருடத்தின் ஷவ்வால் மாத தலைப்பிறை இலங்கையின் எப்பாகத்திலும் தென்படாமை காரணமாக, ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை மறுநாள் (14) வெள்ளிக்கிழமை கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

புனித ஷவ்வால் மாத தலைப் பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி ஜே அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில்  இடம்பெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ரமழான் மாதத்தின் 29ஆம் நாளான இன்று (12) பிறை பார்க்கும் மாநாடு இடம்பெற்ற நிலையில், தற்போது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படாமை காரணமாக, ரமழான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, நாளை மறுநாள் பெரநாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைப் பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை சுகாதாரப் பிரிவின் வழிகாட்டலுக்கு அமைய, இலங்கை வக்பு சபையின் வேண்டுகோளுக்கிணங்க, பெருநாள் தொழுகையை வீட்டிலேயே குடும்பத்துடன் தொழுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...