மாவட்டங்கள் முடக்கப்பட்டால் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க விசேட பொறிமுறை

-  ஜனாதிபதி செயலணி குழு கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆராய்வு

மாவட்டங்கள் அல்லது பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் அல்லது முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தகைய மாவட்டம் அல்லது பிரதேசங்களின் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையை கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகள் மற்றும் நுகர்வோருக்கான பொருட்களை தொடர்ச்சியாக பிரதேச மட்டத்தில் பகிர்ந்தளிப்பதற்கு முறையான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று முதலாவது அலையின் போது அது தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களை அடிப்படையாக வைத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெஸில் ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ள விசேட கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதற்கிணங்க சேவைகளை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நீர், மின்சாரம், எரிவாயு, எரிபொருள், தனிப்பட்ட சுகாதார சேவை, தொடர்பாடல், கழிவு முகாமைத்துவம் மற்றும் அவசர நிலைமைகளை முகாமைத்துவப்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட்கள் விநியோக வேலைத் திட்டத்தின் போது அரிசி, மரக்கறி, உருளைக்கிழங்கு,பருப்பு, வெங்காயம், மிளகாய்,கருவாடு, தேங்காய்,தேங்காயெண்ணெய் கோழி இறைச்சி, மீன், முட்டை, பால் மா, மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் ஆகியவற்றை தேவையான இடங்களுக்கு வினியோகிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நடமாடும் வியாபாரிகளுக்கும் அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்டம் அல்லது பிரதேச செயலாளர்களுக்கு ஊடாக வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச வங்கிகள், சதொச விற்பனை நிலையங்கள், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள் பொது நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி அவற்றை திறந்து வைத்திருத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...