இந்தியாவின் வைரஸ் திரிபு: சுகாதார அமைப்பு அவதானம்

இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதுவகைக் வைரஸ் திரிபை, அக்கறைக்குரிய கொரோனா வைரஸ் வகைப் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாய்ச் சேர்த்துள்ளது.

பி-1617 எனும் அந்தக் கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவக்கூடியது என்பதை ஆரம்பக்காலத் தகவல்கள் காட்டுவதாய் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

கடந்த ஒக்டோபரில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அது முதலில் கண்டறியப்பட்டது.

“மும்மடங்கு திரிபு” என்றும் அழைக்கப்படும் அந்தக் வைரஸில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவகை, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட வைரசுடன் நெருங்கிய தொடர்புடையது. மற்றது, கலிபோர்னியாவில் பரவிவரும் வைரஸை போன்றது.

குறைந்தது 10 புதிய கொரோனா வைரஸ் வகைகளை உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது.

உலகில் அக்கறைக்குரிய கொரோனா வைரஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ள நான்காவது வைரஸ் பி-1617 ஆகும். முன்னதாக, பிரிட்டன், தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட வைரஸ் வகைகள் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இந்தியா முழுவதும் பரவியுள்ள பி-1617 வைரஸ், மேலும் 17 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலவி வரும் கொரோனா இரண்டாம் அலைக்கும் இந்தத் திரிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கூறுகிறது. எனினும் இது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இந்திய கொரோனா திரிபுக்கு எதிராக செயல்படும் திறன் உடையவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எனினும் இது திரிபுக்கு எதிரான தடுப்பூசிகளின் வீரியம் குறைந்து இருப்பதற்கான சில ஆதாரங்கள் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...