அமெரிக்காவில் எண்ணெய் குழாய் மீது சைபர் தாக்குதலால் அவசர நிலை அமுல்

அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் குழாய் மீது ரான்சம்வேர் சைபர் தாக்கதல் இடம்பெற்றிருக்கும் நிலையில் அந்நாட்டு அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

நாட்டின் கிழக்குக் கடற்கரைக்கு டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருளில் 45 வீதமான நாளொன்றுக்கு 25 மில்லியன் பீப்பாய் எரிபொருளை விநியோகிக்கும் எண்ணெய் குழாயே தாக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றக் கும்பல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இதன் செயற்பாட்டை முழுமையாக நிறுத்திய நிலையில் அதனை மீண்டும் இயக்க வைப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வீதி வழியாக இந்த எரிபொருளை எடுத்துச் செல்வதற்கு வழி செய்யும் வகையிலேயே அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 18 மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் ஏனைய சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய உற்பத்திகளை எடுத்துச்செல்வதற்காக தற்காலிக சேவை விலக்கு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் விலை 2 முதல் 3 வீதம் வரை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியிருக்கும் நிலையில், இதனை சரிசெய்ய நீண்ட காலம் எடுத்துக்கொண்டால் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று எச்சரித்துள்ளனர்.

இதில் டார்க்சைட் என்ற சைபர் குற்றக் கும்பல் ஒன்றே இந்த ரான்சம்வேர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பல தரப்புகளை மேற்கோள்காட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் எண்ணெய் குழாய் வலையமைப்புக்குள் ஊடுருவி சுமார் 100 ஜி.பி தரவுகளை பிணையில் வைத்துள்ளது.

பிணைத் தொகையை செலுத்தாவிட்டால் அந்தத் தரவுகளை இணையத்தில் கசியவிடுவதாகவும் அந்தக் கும்பல் எச்சரித்திருப்பதாக கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...