வெறிச்சோடியது தமிழ்நாடு! | தினகரன்

வெறிச்சோடியது தமிழ்நாடு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். முழு ஊரடங்கு காரணமாக நேற்று வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.

அரசு துறைகளில் மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் தவிர அனைத்து அலுவலகங்களும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை.

கடைகள் முழுமையாக மூடப்பட்டன. வழிபாட்டு தலங்களில் திருவிழா, குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் கோவில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன.

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே ஓடியதால் வீதிகள் பரபரப்பின்றி காணப்பட்டன.

தமிழகம் முழுவதும் ஐ.டி. நிவனங்களில் பணிபுரிவோர் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணிகளை மேற்கொண்டனர். முழு ஊரடங்கில் தடையை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் உள்ளிட்டோர் மீதும், தேவையின்றி வெளியில் வந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோது பல இடங்களில் பொலிசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தடையை மீறி வெளியில் வருபவர்களிடம் கெடுபிடி காட்டக் கூடாது என்று டி.ஜி.பி. திரிபாதி, சென்னை பொலிஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் பொலிசாருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர்.

இதனை ஏற்று இன்று பல இடங்களில் தடையை மீறி வெளியில் சுற்றியவர்களை பிடித்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர். கெடுபிடியுடன் நடந்து கொள்ளவில்லை. இதற்கு மாறாக கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டனர்.தடையை மீறி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை பொலிசார் புகைப்படம் எடுத்து வழக்கு போட்டனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வாகனங்களையும் வீதியில் பறிமுதல் செய்யவில்லை. வழக்கு தாக்கல் செய்த சில நிமிடங்கள் கழித்து வாகனங்களை விடுவித்தனர்.

பொலிசார் முகக்கவசம் அணிந்து பணியாற்றினர். விசாரணையின் போது சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடித்தனர்.


Add new comment

Or log in with...