குறிஞ்சித்திணைக்கு சிறப்பு சேர்க்கும் அறத்தொடு நிற்றல்

- தலைவன், தலைவி காதல்

அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலியன குறிஞ்சித் திணைக்குச் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகள் ஆகும்.

அகத்திணை மாந்தர்களின் மன, மண ஒழுக்கங்களைக் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்குவர். இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும்.

தலைவியின் களவு ஒழுக்கத்தை, பிறருக்குத் தெரியாமல் தலைவன், தலைவி மனங்கள் ஒன்று சேர்ந்ததை உண்மையோடு வெளிப்படுத்தலே அறத்தொடு நிற்றல் ஆகும்.

தலைவி,தோழி, செவிலி, நற்றாய் என ஒவ்வொருவரும் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும். தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தலாகும்.

தலைவிக்கு உடனிருந்து பிறர் அறியாமல் களவுக் காதலுக்கு உதவியவள் தோழி. களவுக் காதல் கற்பாக மாற வேண்டும். காதல் வெளிப்பட்டுத் திருமணம் நிகழ வேண்டும். ஆதலால் வாய்ப்பு ஏற்படும் பொழுது தோழி செவிலிக்குத் தலைவியின் காதலைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். களவை வெளிப்படுத்தல் என்று கூறாமல் அறத்தொடு நிற்றல் என்று பெயர் வைத்துள்ளது சிறப்பாகும்.

தலைவியின் கற்பு அறத்தைக் காப்பதற்காகக் களவு உண்மையை வெளிப்படுத்துவதால் இது அறத்தொடு நிலை என்று சொல்லப்படுகிறது.

அகவன் மகளே ! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே! 
(குறுந்தொகை- 23 : 3-5, ஒளவையார்)

ஒரு குறிப்பிட்ட மலையைச் சார்ந்த தலைவன் ஒருவனை விரும்பினாள் தலைவி. செவிலித்தாய் தலைவியின் போக்கில் மாற்றத்தை உணர்கிறாள். எனவே குறத்தியை அழைத்துத் தலைவியின் மாற்றத்துக்குக் காரணம் அறியக் குறி கேட்கிறாள்.குறத்தி குறி கூறுமுன் வழக்கப்படி பல மலைகளையும் பற்றிப் பாடத் தொடங்குகிறாள். தலைவனுடைய மலையைப் பாடும் போது தோழி குறுக்கிட்டுக் கூறுகிறாள் : “குறத்தியே! பாடு, பாடு, அவருடைய மலையை மட்டுமே பாடிக் கொண்டேயிரு" என்கிறாள். இவ்வாறு குறி கூறுபவளைப் பார்த்து அவர் மலையை மட்டுமே பாடும் என்பது தாய்க்கு ஐயத்தை உறுதியாக ஏற்படுத்தும். அவர் மலை என்பதில் உள்ள குறிப்பு தலைவியின் மாற்றத்திற்கான காரணத்தைத் தாய்க்கு வெளிப்படுத்திவிடும். களவு வெளிப்பட்ட பின் திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிடும். இதுவே தோழியின் எதிர்பார்ப்பு. இவ்வாறு குறிப்பாக நிகழ்வதே அறத்தோடு நிற்றல் நிகழ்ச்சி.

குறிஞ்சிப் பாடல்களை இயற்றுவதில் மிகச் சிறந்தவர் கபிலர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு. 261 அடிகளை உடைய குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல் துறையில் அருமையாக அமைந்துள்ளது.

தோழி செவிலித்தாய்க்குக் கூறும் கூற்றாக இப்பாட்டு அமைந்துள்ளது. அன்னாய் வாழி வேண்டு அன்னை (குறிஞ்சிப் பாட்டு -1)

குறிஞ்சிப்பாட்டின் இம்முதல் அடி அறத்தொடு நிற்க விரும்பும் தோழி செவிலித்தாயின் கவனத்தைத் தன்முகமாகத் திருப்பப் பேசும் பேச்சுத் தொடக்கம். தன்னை நோக்கித் திரும்புபவள் தன் சொல்லின் உண்மையை நோக்கித் திரும்புவாள் என்று தோழி நம்புகிறாள். (​தொடரும்)


Add new comment

Or log in with...