கல்முனை வடக்கு பி.செ.: கணக்காளரைக்கூட நியமிக்க முடியாதிருந்த நல்லாட்சி அரசு | தினகரன்

கல்முனை வடக்கு பி.செ.: கணக்காளரைக்கூட நியமிக்க முடியாதிருந்த நல்லாட்சி அரசு

- தனது இருப்பை தக்கவைக்க TNAயும் நாடகமாடியது

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் தரம் உயர்வு விடயத்தை காண்பித்து தனது இருப்பை பாதுகாக்க நல்லாட்சி அரசு நாடகமாடியதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தரவேண்டும் என அங்கு வாழ்கின்ற அ​ேனகமான தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர். நல்லாட்சி அரசில் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக

பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நான், நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவின் தமிழ் பிரதிநிதியாக இருந்த காலகட்டத்தில் கல்முனை விவகாரம் தொடர்பில் நடத்திய போராட்டத்துக்கு நேரில் சென்று இருந்தேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்றத்தை வழி நடத்துபவர்களாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமே காணப்பட்டது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் போராடிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்சவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வர முன் கல்முனை விவகாரத்தை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவும்தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கான கணக்காளர் வெற்றிடத்தை கூட நல்லாட்சியில் தயார் செய்யவில்லை.

வெற்றிடத்தை தயார் செய்து அனுமதி பெறாது அப்போதைய சூழ்நிலையை கையாள்வதற்காக கணக்காளர் ஒருவரை குறித்த பிரதேச செயலகத்திற்கு அனுப்பி மக்களை ஏமாற்றினார்கள்.

இவ்வாறான நிலையில் துறை சார்ந்த அமைச்சரான சமல் ராஜபக்ஷவை கடந்த வாரம் கொழும்பில் அரசாங்க கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த போது குறித்த விடயம் தொடர்பில் அவருடன் கலந்துரையாடினோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய கணக்காளர் ஒருவரை நியமிக்கிறோம் எனக் கூறியவர்கள் புதிய கணக்களார் வெற்றிடத்தை கூட தயாரிக்கவில்லை என்ற உண்மை அப்போது வெளிச்சத்திற்கு வந்தது.

அமைச்சர் சமல் ராஜபக்ச கல்முனை விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்காக கணக்காளர் பதவியை சட்டரீதியாக ஏற்படுத்துமாறு தனது செயலாளருக்கு அறிவுறுத்துவதாக எம்மிடம் தெரிவித்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...