உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு நீரை எவ்வாறு அருந்த வேண்டும்? | தினகரன்

உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு நீரை எவ்வாறு அருந்த வேண்டும்?

நாம் வாழ்வதற்கு நீர் அவசியம். உணவில்லாமல் சில நாட்கள் வாழலாம். ஆனால் நீரில்லாமல் மூன்று நான்கு நாட்களுக்கு கூட உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளை கடத்திச் செல்லும்

ஊடகமாகவும், உடலின் பல தொகுதிகள் செயற்பட சுத்திகரிப்பு திரவமாகவும், உடம்பில் நச்சுப் பதார்த்தங்களை அகற்றும்

நாளங்களை துப்வுரவு செய்யவும் நீர் பயன்படுகின்றது. அதனால் நீரை மனிதன் சரியாக அருந்தா விட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஒருவர் நாளொன்றுக்கு 2-3 லீற்றர் நீரை அருந்த வேண்டும் என கூற முடியாது. ஏனென்றால் மனிதர்கள் இயற்கையாகவே ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். வாழும் சூழல், உடல் உஷ்ணம், வயது, உடல் நிறை, ஈடுபடும் செயல்பாடுகள், தொழில், காலநிலை போன்ற காரணிகளால் அருந்தும் நீரின் அளவு மாறுபடுகிறது.

அதனால் நாம் ஆயுர்வேத வைத்திய முறைப்படி நீரை எவ்விதம் அருந்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

நாம் சாதாரணமாக உணவை ஓரிடத்தில் அமர்ந்தே உண்கிறோம். ஆனால் நீரை அவ்வாறு அருந்துவதில்லை. அநேகமாக நின்றபடி அவசரமாக நீரை அருந்துகிறோம். அமர்ந்தபடி நீரை அருந்துவதன் மூலம் உடலில் நரம்பு மண்டலம் இலகுவடைவதோடு உணவு சீரணிப்பதும் இலகுவாகிறது.

சிறுநீரகத்தில் இரத்த சுத்திகரிப்பும் முறையாக நடைபெறும். நீரை விரைவாக அருந்தாமல் மிடறு மிடறாக மெதுவாக சுவாசித்தவாறு அருந்த வேண்டும். அதன் மூலம் உடலில் நீரின் அகத்துறிஞ்சல் இலகுவாக்கப்படுகிறது.

அத்துடன் நாம் அருந்தும் நீர் குறைந்தபட்ச அறைவெப்ப நிலையில் காணப்பட வேண்டும். அதிகளவு குளிர்ந்த நீரை அருந்துவதால் சமிபாட்டுக்கு தடை ஏற்படும். பிற்காலத்தில் மலச்சிக்கலையும் அப்பழக்கம் ஏற்படுத்தும்.

சூடான நீரைப் பருகுவதால் உடலின் நிறை குறைவடைவதோடு வலி மற்றும் வீக்க நிலைமையும் குறையும். மயக்கம், அதிக உஷ்ணம், வாந்தி, எரிச்சல், இரத்தத்தில் நச்சுத் தன்மை உள்ள போது நீரை அருந்துதல் நல்லது. ஆனால் வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, தொண்டை அழற்சி, சளி உள்ள வேளைகளில் குளிர்ந்த நீரை அருந்தக் கூடாது.

ஆயுர்வேதத்தில் பல விதங்களில் சூடாக்கிய நீரை மசாலா மற்றும் மருந்து மூலிகைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை காணப்படுகிறது. அதன் பிரகாரம் சாதாரண நீர் ஆறு மணித்தியாலயங்களிலும்,சுட்டு ஆறிய நீர் மூன்று மணித்தியாலயங்களிலும், சூடான மூலிகைகள் அடங்கிய நீர் அவற்றிலுள்ள மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் காரணமாக ஒன்றரை மணித்தியாலயத்திலும் அகத்துறிஞ்சப்படுவதாக ஆயூர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் இளம் சூடான நீரை அருந்த முடிந்தால் உடம்பிலுள்ள நச்சுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.

ஒரு குவளை நீருடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதன் மூலம் உணவு சமிபாடடைவதோடு, உடல் நிறை குறைவதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், வைரஸினால் பரவும் நோயை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.

சில துளிகள் இஞ்சி சாற்றை ஒரு கோப்பை நீருடன் கலந்து அருந்துவதால் சமிபாடு இலகுவாகும். உடல் குளிர்வடையும், நீரிழப்பை தடுப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நறுக்கிய வெள்ளரிக்காய்களை நீரிலிட்டு அருந்தினால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் நீரிழப்பை தடுக்க முடியும். அழற்சியிலிருந்து மீளலாம். தற்போது மனித நடவடிக்கைகளால் நீர் அசுத்தமடைந்துள்ளது. அதனால் நீரை அருந்துவதற்கு முன்னர் அந்நீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் பெறப்பட்டாலும், நீண்ட காலம் இருப்பதால் குழாய்களில் தங்கியிருக்கும் அசுத்தங்கள் காரணமாக நீர் அசுத்தமடையலாம்.

முற்காலத்தில் நீரை தூய்மையாக்க பாவித்த முறைகளை நாம் இன்றும் உபயோகப்படுத்தலாம். அது உங்களது ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கும். செம்பு மற்றும் வெள்ளி பாத்திரங்களில் நீரை சேமித்தல் மிக சிறந்தது என ஆயூர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர் கயா லக்மாலி
சமூக சுகாதார அதிகாரி,
மினுவாங்கொட

- தம்மிக்க சுரன்ஜி பத்திரன...
(தமிழில்: வீ.ஆர். வயலட்)


Add new comment

Or log in with...