‘முருகியம் ’கவிதை நூல் திருகோணமலையில் வெளியீடு | தினகரன்

‘முருகியம் ’கவிதை நூல் திருகோணமலையில் வெளியீடு

கவிஞர் தாமரைத்தீவானின் முதல் கவிதை நூலை வெளியிட்ட பெருமை எமக்குண்டு. தனது தொன்னூறாவது வயதிலும் இளைஞனைப்போல் துடிப்பான சிந்தனையுடன் கவிதை வடிப்பவர் கவிஞர் தாமரைத்தீவான் என திருகோணமலையில் கவிஞர் தாமரைத்தீவானின் முருகியம் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர். வி. மைக்கல் கொலின் தெரிவித்தார்.

கவிஞர் தாமரைத்தீவானின் 1990 களில் வெளிவந்த கீறல்கள் கவிதை நூல் வடகிழக்கு மாகாண சாகித்திய விருதினை பெற்றது.

கவிஞரின் இருபத்தெட்டாவது கவிதை நூலான பொன்னகம் மீட்போம் மகுடம் வெளியீடாக வந்தது இதுவும் கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றது. தற்போது வெளியிடப்படும் முருகியம் கவிஞரின் முப்பத்தெட்டாவது நூலாகும். முருகு என்பது அழகைக்குறிக்கும் முருகன் அழகன். முருகனைப்பற்றி பாடல்களை கொண்டதும் இந்நூலை வெளியிட்டு உதவிய கவிஞரின் நண்பரான முருகானந்தன் என்ற பெயரை தாங்கிய நூலாக வரவேண்டுமென்பதற்காக சிலேடையாக வைத்த பெயராகவும் முருகியம் அமைகிறது. இது கவிஞரின் கவிச்சிறப்புக்கு சான்று என்றும். மைக்கல் கொலின் தெரிவித்தார். கொரோனா கால பாதுகாப்பினை முன்னிட்டு குடும்ப நிகழ்வாக நடைபெற்ற இவ் வெளியீட்டு நிகழ்வில் நூலின் முதல் பிரதி கவிஞர் தாமரைத் தீவானின் வாரிசுக் கவிஞர் கவிஞர் அ.கெளரிதாசனக்கு வழங்கிவைக்கப்பட்டது.

கவிஞர் தாமரைத்தீவான், அவரது புதல்வர் இரா.நெடுஞ்செழியன், இந்நூலை பதிப்பித்த இலக்கிய ஆர்வலர் ந.முருகானந்தன் ஆகியோருக்கும் நூலின் பிரதி வழங்கிவைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...