பத்திரிகை சுதந்திரத்தை நாம் எந்தளவு கடைப்பிடிக்கிறோம்.....

பத்திரிகைத்துறை பல காலமாக பலம்மிக்க, ஒரு தனி மனிதனின், ஒரு நாட்டின், ஏன் உலகளாவிய ரீதியில் கூட பல வரலாற்று திருப்பங்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது.

நாடளாவிய / உலகளாவிய ரீதியில் தனித்தன்மை மிக்கதாகவும் சுதந்திரம் மிக்கதாகவும் மக்களின் தகவல் அறியும் உரிமையை மதிப்பதாகவும் விளங்கும் அதி உன்னத பொறுப்பு வாய்ந்த ஒரு விடயமாக பத்திரிக்கை துறை விளங்குகிறது.

ஊடகம் என்பது ஒரு கலை,சேவையாகும். இவ் ஊடகத்துறையில் பத்திரிகையின் பங்களிப்பானது காலம் கடந்தும் வலுவான ஒன்றாக திகழ்கிறது.

நவீன மயப்படுத்தப்பட்ட இக்காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதை நாம் அவதானிக்க முடிகிறது. ஒரு பொறுப்பான பிரஜையாக சமூக வலைத்தளங்களில் பத்திரிகை துறையின் தர்மத்தை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கின்றது என்று வினவினால் அது கேள்விக்குறியாகவே இருப்பதை அவதானிக்கலாம்.

பத்திரிகைத்துறை ஆனது பயிற்றுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே கைவந்த கலையாகும். ஏனென்றால் சரியாக ஆராயப்படாத, உறுதிப்படுத்தப்படாத எந்த ஒரு செய்தியும் ஒரு மனிதனின், ஏன் ஒரு நாட்டினதும் தலைவிதியையே மாற்றியமைக்கக்கூடிய சக்தி படைத்தது.

துப்பாக்கி குண்டுகளை விடவும் பேனாமுனை பாரிய பலம் வாய்ந்தது என்பது வல்லுனர்களின் அனுபவ வார்த்தை என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது நாட்டில் பத்திரிகை துறை சார்ந்து பல வல்லுனர்கள் கடந்த காலங்களில் நிலவிய துர்ப்பாக்கிய சூழலில் கொல்லப்பட்டது வரலாறு. இவ்வாறான வரலாற்றுச் சான்றுகள் உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது.

பத்திரிகை சேவை என்பதையும், பத்திரிக்கை துறை என்பதையும் நாம் பயபக்தியோடு போற்ற வேண்டும். அதன் தர்மத்தை மதிக்க வேண்டும். பத்திரிகை துறையின் சுதந்திரம் இன்று மிகச்சாதாரணமாக மீறப்பட்டு வருவதை சமூக வலைத்தளங்களில் நாம் கண்கூடாக காண முடிகிறது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் நாம் பத்திரிகை தர்மத்தை, அதன் சுதந்திரத்தை மதிக்கவும் பாதுகாக்கவும் இந்த நாளில் உறுதி பூணுவோம். வெறுமனே வார்த்தைகளில் அல்லது செயற்பாடுகளில் நாம் அதை எந்த அளவு ஏற்றுக் கொள்கிறோம், எந்த அளவு கடைபிடிக்கிறோம் என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

பவதாரணி ராஜசிங்கம்


Add new comment

Or log in with...