நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 56 வர்த்தகர்களுக்கு அபராதம்

- அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 56 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 02 இலட்சத்தி 49 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இத் திடீர் சுற்றிவளைப்பின் போது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 82 வர்த்தகர்களுக்கெதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்திற்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இதில் 56 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 02 இலட்சத்தி 49 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள், எதிர்காலத்தில் பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளவுள்ளதாகவும், மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...