இனநல்லுறவுக்காக இறுதிக்காலம்வரை உழைத்த இலக்கியவாதி மருதூர் வாணர் | தினகரன்

இனநல்லுறவுக்காக இறுதிக்காலம்வரை உழைத்த இலக்கியவாதி மருதூர் வாணர்

பிரபல எழுத்தாளரும், கவிஞரும் ‘சமாதானம்’ சஞ்சிகையின் ஆசிரியருமான
மருதமுனையைச் சேர்ந்த கலாபூசணம் எஸ்.எல்.ஏ. லத்தீப் என்ற ‘மருதூர் வாணர்’
இலங்கையின் கலை, இலக்கியப்பரப்பில் பல சாதனைகளை புரிந்துள்ளார். இலக்கியமே இவர் பேச்சிலும், மூச்சிலும், நடைமுறைச் செயற்பாடுகளிலும் இருந்தது. தள்ளாத வயதிலும் தளராத மன உறுதியோடு இலக்கியப் பணி செய்து வந்தவர் மருதூர் வாணர்.

தனது பழைய சைக்கிளில் தினமும் நூலகத்திற்குச் சென்று நாளேடுகள் அனைத்தையும் வாசித்து முடிப்பது அவரது நாளாந்தக் கடமைகளில் முக்கியமானதொன்றாகும். எல்லாக் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் முன்வரிசையில் அமர்ந்து கொள்வார். நல்ல கலை இலக்கிய எழுத்துக்களைப் பாராட்டுவார், யாராக இருந்தாலும் பிழையானவற்றை துணிந்து விமர்சிப்பார்.

ஆரம்ப காலத்தில் கலை இலக்கித்தோடு அசியலில் அதிக ஈடுபாடு கொண்டு பல தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார். தந்தை செல்வநாயகத்துடனும் பின்பு மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்புடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். இவர்1939.08.24ஆம் திகதி மருதமுனையைச் சேரந்த சாலிஹ்லெவ்வை போடியார்,சரீபா உம்மா தம்மபதியருக்கு 3வது மகனாக பிறந்தார்.

தனது இலக்கிய ஆசான்களாக புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையையும் அவருக்குப் பின் புலவர்மணிஆ.மு.ஷரிபுத்தீனையும் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.1951ஆம் ஆண்டு 'என் தம்பி'என்ற தலைப்பில் பத்திரிகையில் பிரசுரமான கவிதையின் மூலம் தனது 11வது வயதில் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்துள்ளார். இவர் பாடல், நடிப்பு, இசை ஆகிய துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். அத்தோடு நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதியுள்ளதோடு நபி ஜனன பா, இசைவிருந்து, முரசொலி, பெருநாள் பரிசு, முதலிரவு, சூறாவளி, மத்திய கிழக்கிலே,சுனாமி போன்ற நூல்கள் உள்ளிட்ட பல சிறிய நூல்களையும் எழுதியுள்ளார்.

‘தேன்மதி’ என்ற சஞ்சிகையை வெளியிட்டதோடு இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வின் மூலம் சமாதானம் வளரவேண்டும் என்ற தூய எண்ணத்தோடு 'எல்லா இனங்களும் இணைந்தன்பு கொள்வோம்'என்ற தொனிப்பொருளில் 1988 ஜூலை மாதம் முதலாவது 'சமாதானம்' சஞ்சிகை இதழை வெளியிட்டு மரணிக்கும் வரை 16 இதழ்களை வெளியிட்டுள்ளார். 17வது சமாதானம் இதழை வெளியிட இருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.

உள்நாட்டில் அனைத்து தேசிய பத்திரிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதியுள்ளார். குட்டிப் புலவன் இசைவாணர், ஈழபாரதி என பல பட்டங்களைத் தன்னகத்தே கொண்டதோடு 2001ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதும் அரசாங்கத்தால் இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பணியைப் பாராட்டி யாழ் தந்தை செல்வா நினைவு மன்றத்தால் 2004.04.26ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் 'தந்தை செல்வா விருது' வழங்கப்பட்டது. தினச்சுடர் விருதும் சிரேஷ்ட கவிஞருக்கான சான்றிதழும் கடந்த 2004.06.06 ஆம் திகதி கல்முனையில் முன்னாள் ஊடகப் பிரதி அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீனால் வழங்கப்பட்டன.மேலும் தென்கிழக்குப் பல்கலைக் கழக அப்போதய பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச். காலிதீன், செழியன் பேரின்பநாயகம் உட்பட பலர் இவருக்குப் பொன்னாடைபோர்த்தி இவரது இலக்கியப் பணியைப் பாராட்டியுள்ளனர்.

மருதூர் வாணர் தான் வாழும் காலத்திலேயே ஊடகவியலாளர்களையும், கலை இலக்கியவாதிகளையும் பாராட்டி வாழ்த்துப் பத்திரம்,பணமுடிப்பு என்பன வழங்கி கௌரவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இலக்கியப் படைப்புகளின் பிரசவத்திற்கு சட்டத்தரணியும்,பதில் நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். பதுறுத்தீன் அவ்வப்போது நிதியுதவி வழங்கி மருதூர் வாணரை உச்சாகப்படுத்தினார். அவர் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையான நூல்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மருதமுனை பொது நூலகம், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி நூலகம் ஆகியவற்றுக்கு தனது அந்திமக் காலத்தில் வழங்கினார். இவரது கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள்,நூல்கள்,ஏனைய இலக்கியப் படைப்புக்கள் அனைத்தும் தென்கிழக்குப் பல்ககலைக்ககழகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

கலாபூசணம் எஸ்.எல்.ஏ. லத்தீப் என்ற மருதூர்வாணர் தனது எழுபதாவது வயதில் கடந்த 2009.05.08ஆம் திகதி மருதமுனை பிரதான வீதியைக் கடக்க முற்படும் போது விபத்தில் அகப்பட்டு உயிரிழந்தார். இவர் மரணித்து 08.05.2021 அன்று 12 வருடம் பூர்த்தியடைகின்றது.

பி.எம்.எம்.எ. காதர்
(மருதமுனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...