மாலையில் அல்லது இரவில் இடியுடன் பலத்த மழை

மாலையில் அல்லது இரவில் இடியுடன் பலத்த மழை-Evening Thundershower

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடி மின்னல் வேளைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • வெட்டவெளியில் அல்லது மரத்தின் கீழ்  நிற்க வேண்டாம். பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடிய நிலையில் உள்ள வாகனங்களில் இருக்கவும்.
  • வயல்கள் தோட்டங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும்  நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதைத் தவிருங்கள்.
  • கம்பி இணைப்புடனான தொலைபேசிகள் மற்றும் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • துவிச்சக்கர வண்டி, உழவு இயந்திரம், படகு போன்ற திறந்த நிலையில் உள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • கடும் காற்றின் காரணமாக, மரங்கள் மற்றும் மின் கம்பிகள் அறுந்து வீழ்வதற்கு வாய்ப்புக் காணப்படுவதால் அது தொடர்பில் அவதானமாக இருங்கள்.
  • அவசர நிலையின் போது, குறித்த பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியின் உதவியை நாடுங்கள் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...