"மைக்கலின் எழுத்தில் காதலும் ஒருவித கிறக்கமும் இருக்கும்" | தினகரன்

"மைக்கலின் எழுத்தில் காதலும் ஒருவித கிறக்கமும் இருக்கும்"

‘சிலுவைகளே சிறகுகளாய்’ ‘வீணையடி நீ எனக்கு’ ஆகிய இருநூல்களும் சமகாலத்தினை பேசுகின்றன. சம்பவங்களை போலவே இந் நாவலில் வரும் பாத்திரங்களில் பலர் நிஜமான பாத்திரங்களாகவுள்ளனர் என திருகோணமலை சண்சைன் ஹோட்டலில் நடைபெற்ற வி. மைக்கல் கொலினின் இரு நூல்களின் அறிமுகவிழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த யாழ். மாவட்டச்செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

மைக்கல் கொலின் இயங்கியலுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். அதுவே அவரது வெற்றியாகும். தாகத்தில் தொடங்கி மகுடம்வரை அவரது தொடர் ஓட்டம் முற்றுப்பெறாமல் பயணிக்கிறது.

எதிர்கால தமிழ் இலக்கிய வரலாற்றை மைக்கல் கொலின் என்ற பெயர் இல்லாமல் எழுதிவிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

நண்பர்கள் வட்டம் ஏற்பாடுசெய்து திருகோணமலை  இலக்கிய ஆய்வாளர் திருமலை நவம்  தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொடர்ந்தும் உரையாற்றிய யாழ் மாவட்ட செயலாளர்:

சிலுவைகளே சிறகுகளாய் (கவிதை நூல்) வீணையடி நீ எனக்கு (நாவல்) ஆகிய இருநூல்களும் சமகாலத்தினை பேசுகின்றன.

இந்த காலகட்டத்தினை கடந்துதான் நாங்களும் வந்திருக்கிறோம். மைக்கலின் எழுத்தில் ஒருவித கிறக்கமும் காதலும் இருக்கும். அதேவேளை எதற்கும் அடிபணியாத ஆக்ரோசமான கலகக்குரலும் அதில் இருக்கும்.  வீணையடி நீ எனக்கு நாவலில் வரும் ஒற்றைப்பனையை யாரும் மறந்துவிடமுடியாது.

இந்த ஒற்றைப்பனைக்கு கீழே நாங்களும் கூடிக்கதைத்திருக்கிறோம். சரித்திர முக்கியத்துவம் பெற்ற பனைமரம் இரவோடிரவாக காணாமல் போய்விட்டது.

சம்பவங்களை போலவே இந்நாவலில் வரும் பாத்திரங்களில் பலர் நிஜமான பாத்திரங்களாகவுள்ளனர். பேராசிரியர்கள் சி. மெளனகு, பாலசுகுமார், மற்றும் ஆங்கில விரிவுரையாளரான நண்பர் க. மகேஷ்வரன் ஆகியோர் பாத்திரங்களாகியுள்ளனர். அந்தவகையில் இது சமகால நாவலுக்குரிய தன்மையை பெற்றுவிடுகின்றது. என்றார்.

நூல்களின் முதல் பிரதியை திருமதி ராஜேஸ்வரி ராமநாதன் மாவட்டச் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் வ. கனகசிங்கம்,  கவிதாயினி பாலையூற்று அஷ்ரபா நூர்தீன் ஆகியோர் சிறப்பதிதிகளாக கலந்து சிறப்புரையாற்றி னர்.கவிதை, நாவல் தொடர்பான விமர்சனங்களை  கவிஞர்கள் திருமலை சி. காண்டீபன், லலிதகோபன் ஆகியோர் வழங்கினர்.  நிகழ்வில் செல்வி. கிரிஜா கனகரட்ணம் தலைமையில் திருமலை கலைஞர்கள் பங்குபற்றிய புல்லாங்குழல் இசை நிகழ்வும் நடைபெற்றது.

கவிஞர். தி. பவித்திரன் நிகழ்வை தொகுத்து வழங்க நூலாசிரியர் வி. மைக்கல் கொலின் நன்றியுரை ஆற்றினார்.(ஸ)


Add new comment

Or log in with...