சாணக்கியனின் கூற்று அப்பட்டமான பொய்

சபையில் ஹரீஸ் M.P காட்டம்

கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை நாம் கொண்டுவர முயற்சிப்பதாக சாணக்கியன் எம்.பி. கூறியது அப்பட்டமான பொய். அவ்வாறான எந்த தீர்மானத்தையும் நாங்கள் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம். ஹரிஸ் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,...

சாணக்கியன் எம்.பி. முஸ்லிம் விரோத போக்கை கையில் எடுத்துள்ளார். அம்பாறையில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர்.இந்த அம்பாறை மாவட்டத்தை பிரிக்குமாறோ அல்லது ஒரு தமிழ் அரச அதிபரை நியமிக்குமாறோ கேட்கக்கூட முடியாதவர்தான் இந்த சாணக்கியன். ஆனால் அவர் எம்மை அரசின் கைக்கூலி என்கின்றார். இவர் தான் புலிகளைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானின் கட்சியில் இருந்தவர். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியதாக குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். இவர்தான் தமிழ் மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவர்.

மேலும், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நாம் கை தூக்கியதாக கூறுகிறார்.

கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை நாம் கொண்டுவர முயற்சிப்பதாக சாணக்கியன் கூறுகின்றார். இது அப்பட்டமான பொய். இந்த நோன்பு நாளில் அல்லாஹ் மீது சத்தியமாக கூறுகின்றேன் நான் அப்படிப்பட்ட காட்டிக் கொடுக்கும் குடும்பத்தில் பிறக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச சபை தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றே நாங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்து வந்தோம். அதற்கு தீர்வொன்றை காணும் நோக்கிலே எல்லை நிர்ணய குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. 6 மாதங்களில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் கல்முனை மாநகரின் வரலாறு தெரியாமல், அங்கு தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு எவ்வாறு இருந்தது என்பது தொடர்பாக தெரியாமலே சிலர் சபையில் கதைக்கின்றனர்.

கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

சில சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு எடுத்த தீர்மானங்கள் காரணமாக முஸ்லிம்கள் அதற்கான விளைவை இன்றும் அனுபவித்து வருகின்றனர் என்றார்.


Add new comment

Or log in with...