ஒதுக்கப்பட்ட 50 மில்லியனை கொரோனாவுக்கு பயன்படுத்தவும் | தினகரன்

ஒதுக்கப்பட்ட 50 மில்லியனை கொரோனாவுக்கு பயன்படுத்தவும்

- எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியிடம் கோரிக்கை

கிபிர் விமான பராமரிப்புக்கும் உடற்பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்கவும் செலவிடப்பட்டுள்ள மில்லியன் கணக்கான நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றொன்றை விடுத்தபோதே சபைக்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இக் கோரிக்கையை விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானதுதான். அதே போன்றே கொரோனாவிலிருந்தும் நாட்டை பாதுகாப்பதும் முக்கியம். எனவே கிபிர் விமானங்களை பராமரிக்க அரசு செலவிடவுள்ளதாகக் கூறப்படும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதேபோன்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு செலவிடப்படவுள்ள 650 மில்லியன் ரூபாவையும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு செலவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

இந்த நிதிகள் மூலம் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், ஒட்ஸிசன்,தடுப்பூசிகள் போன்றவற்றை கொள்வனவு செய்ய முடியுமென்றார்.

இதன்போது இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, உடற்பயிற்சி கூடங்களுக்கான நிதி கொரோனா நிதியிலிருந்து பெறப்படவில்லை.

அது வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...