சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திசர பெரேரா ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையிடம் திசர பெரேரா நேற்று (3) சமர்ப்பித்துள்ளார். எனினும், இதுதொடர்பான தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை அறிவிக்கவில்லை.

திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள திசர பெரேரா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கான காரணத்தை இதுவரை குறிப்பிடவில்லை.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராக திகழ்ந்த திசர பெரேரா, இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராகவும் பார்க்கப்பட்டிருந்தார்.

திசர பெரேரா இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி 20 தொடர்களில் விளையாடியிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முக்கிய வெற்றிகளில் ஒன்றாக, 2014ம் ஆண்டு ரி 20 உலகக் கிண்ணத் தொடர் அமைந்திருந்தது. இந்த தொடரில் சிறப்பாக பிரகாசித்திருந்த இவர், இறுதிப்போட்டியில் சிக்ஸருடன் இலங்கை அணிக்கு கிண்ணத்தை வென்றுக்கொடுத்திருந்தார்.

அதேநேரம், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் இவர் விளையாடியிருந்தாலும், 166 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், ஒருநாள் போட்டிகளில் 2338 ஓட்டங்கள் மற்றும் 175 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், ரி 20 போட்டிகளில் 1204 ஓட்டங்கள் மற்றும் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...