பௌத்த மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கும் பணியில் மகாசங்கத்தினர் | தினகரன்

பௌத்த மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்கும் பணியில் மகாசங்கத்தினர்

மிஹிந்தலை தூபிக்கு வெள்ளை வர்ணம் பூசும் புனித நிகழ்வில் பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

இந்நாட்டு கலாசாரம் மற்றும் பௌத்த மதத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அரசு அல்லாத அமைப்புகள் உள்ளதாகவும், இந்த அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்படும் பாதிப்பை தடுப்பதில் மகாசங்கத்தினர் தலையிட்டுள்ளதாகவும், அதன் பிரகாரம் திரிபீடக பாதுகாப்பு சட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப் பெருமை மிக்க மிஹிந்தலை தூபிக்கு வெள்ளை வர்ணம் பூசும் புனித நிகழ்வு அண்மையில் மகாசங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்டது. அவ்வேளையிலேயே பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்தார்.

வணக்கத்துக்குரிய மஹிந்த தேரரை நினைவு கூரும் முகமாக மிகிந்தலைக்கு லேக்ஹவுஸ் நிறுவனம் ஒளியூட்டும் (ஆலோக பூஜாவ) நிகழ்வுக்கு இணைந்ததாக வருடந்தோறும் மேற்படி புண்ணிய நிகழ்வு நடைபெறுகிறது.

இம்முறை இந்த நிகழ்வுக்கு அரலிய வர்த்தக நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன நிதியுதவி வழங்கியிருந்தார். எதிர்காலத்திலும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும், இந்நிகழ்வின் மூலம் இன்று எமது நாட்டு மக்கள் முகம்கொடுத்துள்ள வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட பிரார்த்திப்பதாகவும் பிரபல தொழிலதிபர் ட்டலி சிறிசேன தெரிவித்தார்.

மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. வளஹாஹெங்குனவெவே தம்மரதன தேரர், பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ, வண. கெமான்னே குணானந்த தேரர் உள்ளிட்ட தேரர்களின் தலைமையிலும் ஆசிர்வாதத்துடனும் மிஹிந்தலை தூபிக்கு வெள்ளை வர்ணம் பூசும் நிகழ்வும், பிரித் ஓதும் நிகழ்வும் இடம்பெற்றன.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் விமானப்படை, கடற்படை, இராணும், சிவில் பாதுகாப்புப் படையணி உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் பங்களிப்புடன் இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் சிங்கள அரசர்களின் காலத்துக்குப் பின்னர் மகாசங்கத்தினரின் ஆலோசனை சபையொன்றின் சந்திப்பை மாதந்தோறும் நடத்தி வருகின்றார். அவர்கள் குறைகளை ஜனாதிபதிக்கு சுட்டிக் காட்டுகின்றனர். தலாதா மாளிகை, ஸ்ரீமகாபோதி போன்ற அனைத்துக்குமே மஹிந்த தேரரின் வருகைதான் காரணமாக அமைந்தது. இந்த இடத்தில்தான் பஞ்சசீல கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது என மிஹிந்தலை ரஜமகாவிரையின் விகாராதிபதி கலாநிதி வலஹாஹெங்குனவெவே தம்மரத்ன தேரர் இந்நிகழ்வில் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஆர். எம். வன்னிநாயக்க, லேக்ஹவுஸ் நிறுவன நடவடிக்கை கட்டுப்பாட்டுப் பணிப்பாளர் சட்டத்தரணி கனிஷ்க விதாரண, பிரதி நிறைவேற்று கண்காணிப்பாளர் (நிறுவன நடவடிக்கைகள்) சந்தன பண்டார, செயற்பாட்டு முகாமையாளர் கயான் பண்டார, பொதுவசதிகள் முகாமையாளர் அர்ஜுண சிறிவங்ச, சமூகநல முகாமையாளர் சமிந்த விஜேதுங்க ஆகியோருடன் முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...