படைப்பாளிகளுக்கு ஊக்கம் அளித்து களம் அமைத்து கொடுத்த அன்புமணி | தினகரன்

படைப்பாளிகளுக்கு ஊக்கம் அளித்து களம் அமைத்து கொடுத்த அன்புமணி

இலக்கிய உலகில் அழியாத நாமம்

இராசையா நாகலிங்கம், ‘அன்புமணி’ எனும் புனைபெயரிலே அறிமுகமானவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரையம்பதி இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், இடைநிலை, உயர்தரக் கல்வியை காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார்.

இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் ‘கல்கி’ இதழில் 1954 இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் மற்றும் வானொலியிலும் வெளிவந்துள்ளன.

அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட்/கச்சேரி உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து, ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரியின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவரின் ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • இல்லத்தரசி (சிறுகதை) 1980 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
  • வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை) 1992 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
  • ஒரு தந்தையின் கதை (நாவல்) 1989 - உதயம் பிரசுரம், மட்டக்களப்பு
  • ஒரு மகளின் கதை (குறுநாவல்) 1995 - அன்பு வெளியீடு
  • தமிழ் இலக்கிய ஆய்வு 2007 - சென்னை, மணிமேகலை பிரசுரம்

எட்டுத் தொகை பத்துப் பாட்டு நூல்கள் 2007 - சென்னை, மணிமேகலை பிரசுரம், பதினெண் கீழ்கணக்கு நூல்கள் 2007 - சென்னை, மணிமேகலை பிரசுரம் அன்புமணி தனது இலக்கியப் பணியில் தன்னுடைய நூல்களை மாத்திரம் வெளியிடுவதில் கரிசனைக் காட்டாது பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் உதவியுள்ளார். இவரின் ‘அன்பு வெளியீட்டகம்’ மூலம் வெளியிடப்பட்டுள்ள சில நூல்கள்:

மகோன் வரலாறு – தங்கேஸ்வரி,குள கோபடன் தரிசனம் - தங்கேஸ்வரி,நூறு வருட மட்டு நகர் அனுபவங்கள் - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்,மட்டக்களப்பில் ஒரு மாமனிதர் ஜோசெப்வாஸ் - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்,வாழ்க்கைச் சுவடுகள் (சுயசரிதம்) - ஆசிரியர் திலகம் எஸ். பிரான்ஸிஸ்,நீருபூத்த நெருப்பு (நாடகங்கள்)- ஆரையூர் இலவர், ஆகியன.

கனடாவிலுள்ள ‘ரிப்னெக்ஸ்’ பதிப்பகத்தின் மூலமாக இலங்கையில் வரலாற்றுப் புகழ் பெற்ற பல முக்கிய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவதிலும் இவரின் பங்களிப்பு காணப்படுகின்றது.

இந்த அடிப்படையில் கனடாவில் பதிப்பித்துள்ள சில நூல்களின் விபரம் வருமாறு:

சீ. மந்தினி புராணம் - வித்துவான் ச. பூபாலலிங்கம்,மாமங்கேஸ்வர பதிகம் - வித்துவான் அ. சரவணமுத்தன்,சனிபுராணம் - வித்துவான் அ.சரவணமுத்தன்.

இவர் 'மலர்' என்ற இலக்கிய இதழை 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை வெளியிட்டார். ஈழத்து இதழியல் வரலாற்றில், 'மலர்' கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது.

பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல பாடசாலைக் காலத்தில் நாடகங்களிலும் இவர் நடித்துப் புகழ் பெற்றார். ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, 'பிடியுங்கள் கலப்பையை’ போன்ற நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.

1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு 'சாகித்திய மண்டலப்' பரிசு கிடைத்தது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சி வலை’ எனும் மேடை நாடகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

‘தமிழ்மணி வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது’, கலாபூசணம், பல்கலை வித்தகர்,போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன. அன்புமணி மறைந்து பல வருடங்களானாலும் அவரின் புகழ் மறையாது.

வி.ரி. சகாதேவராஜா...
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...