பிரவீனின் வரலாற்று சாதனையுடன் தொடரை வென்றது இலங்கை அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்ட இலங்கை அணி 2018ம் ஆண்டுக்கு பின்னர் சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 437 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 227 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தொடரை 0---1 என இழந்தது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், சொரிபுல் இஸ்லாம்

போட்டியின் நான்காவது நாள் ஆட்டநேர நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி பெற்றிருந்தது. அதன்படி, நேற்றைய தினம் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் 17 ஓட்டங்களுடன் பிரவீன் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் மெஹிதி ஹசன் மாத்திரம் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். இதனடிப்படையில் 227 ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணிசார்பில், மெஹிதி ஹசனுக்கு அடுத்தப்படியாக , முஷ்பிகூர் ரஹீம் 40 ஓட்டங்களையும், சயீப் ஹசன் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், அறிமுக பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட் பிரதியை கைப்பற்ற, ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி லஹிரு திரிமான்ன மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் சதங்கள் மற்றும் நிரோஷன் டிக்வெல்லவின் வேகமான அரைச்சதம் என்பவற்றின் ஊடாக 493/7 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பங்களாதேஷ் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் 92 ஓட்டங்களை குவித்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை குவிக்காத நிலையில், 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் தமிம் இக்பாலுக்கு அடுத்தப்படியாக மொமினுல் ஹக் 49 ஓட்டங்களையும், முஷ்பிகூர் ரஹீம் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 6 விக்கெட்டுகளை வீழ்த்த, சுரங்க லக்மால் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 194 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்தி பங்களாதேஷ் அணிக்கு 437 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது. இலங்கை அணிசார்பாக திமுத் கருணாரத்ன 66 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தாஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இலங்கை அணி இன்றைய தினம் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் 2018ம் ஆண்டுக்கு பின்னர் தங்களுடைய முதல் டெஸ்ட் வெற்றியை சொந்த மண்ணில் பதிவுசெய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியிருந்தது.

இதனைத்தொடர்ந்து இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1--1 என சமப்படுத்தியதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 2--0 என இழந்திருந்தது.

அதேநேரம், தன்னுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரவீன் ஜயவிக்ரம, அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் பிரதியை கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் மற்றும் முதல் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

இதற்கு முதல் இந்தியாவின் நரேந்திர ஹிரவானி, பாகிஸ்தானின் மொஹமட் சயீன் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜேசன் க்ரீஷா ஆகியோர் கன்னி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் பிரதியை கைப்பற்றி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் போட்டியின் நாயகனான பிரவீன் ஜயவிக்ரமவும் தொடரின் நாயகனாக அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் தெரிவானார்கள்.


Add new comment

Or log in with...