பாடசாலை மாணவர்கள் வீடுகளிள் இருந்தவாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் | தினகரன்

பாடசாலை மாணவர்கள் வீடுகளிள் இருந்தவாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்

கொவிட் தொற்றுக்கு முகங்கொடுத்துக் கொண்டு சுகாதார ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பாடசாலை மாணவர்களை வீடுகளிலிருந்தே உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்துமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனைத்து பெற்றோர்களிடத்திலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் பங்களிப்புடன் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் twitter, Instagram, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் தேசிய தொலைக்காட்சி, EYE நேத்ரா தொலைக்காட்சி ஆகிய வற்றின் ஊடாக ஒவ்வொரு காலை வேளையிலும் பிள்ளைகள் ஆரோக்கியமிக்க வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்காக வீடுகளிலிருந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான நிகழ்ச்சிகளை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

கொவிட் - 19 தொற்றுக்கு மத்தியில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பு விளையாட்டுத் துறை அமைச்சின் முற்றவெளியில் கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 4ம் திகதி சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கட் தலைவரின் அணிக்கிடையில் பல்லேகலே விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் மூலம் கிடைக்கும் முழு வருமானமும் கொவிட் தடுப்பு மருந்து வேலைத்திட்டத்திற்கு அன்பளிப்புச் செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய மூன்றாவது கொவிட் அலையின் ஆபத்திற்கு மத்தியில் இந்த போட்களைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாதுள்ளமை தொடர்பில் விளையாட்டு அமைச்சர் என்ற வகையில் விளையாட்டு ரசிகர்களிடத்தில் தனது கவலையினைத் தெரிவித்த அமைச்சர், இப்போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

“தற்போதைய மூன்றாவது கொவிட் தொற்றின் ஆபத்து நிலையின் காரணமாக பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத நிலையில் மீண்டும் மாணவர்கள் வீடுகளிலிருந்து கல்வியைக் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு என்ற வகையில் நாம் எப்போதும் முயற்சிப்பது சுறுசுறுப்பான சமூகம் மற்றும் செயல் ரீதியான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகும். இதன் மூலம் எமது நாடு தெற்காசியாவில் செயற்பாட்டு நாடாக ஆகும் இலக்கிற்குச் செல்வதோடு, உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் ஊடாக தொற்று நோய்களிலிருந்து மக்களை மீட்பதற்கும் எம்மால் முடிகின்றது.

ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ள இக்காலத்தில் அதற்காக தோள் கொடுத்து மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், கல்வி நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கி மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்கும் ஊடக நிறுவனங்கள் செயற்படுகின்றன.

அத்துடன் நாளின் ஏதாவது ஒரு சிறிது நேரத்தில் பாடசாலை மாணவர்களின் சுகாதார

மேம்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் சிலவற்றை ஏற்பாடு செய்யுமாறும் நான் ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் பங்களிப்புடன் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சினால் நடாத்திச் செல்லப்படும் twitter, Instagram, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக ஒவ்வொரு காலைபொழுதிலும் மாணவர்களின் ஆரோக்கியத்தை நோக்காகக் கொண்டு வீடுகளிலிருந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடும் நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

தொலைக்காட்சி அல்லது இணைய நிகழ்ச்சிகளில் கல்வி கற்பதற்கு வழங்கப்படும் சந்தர்ப்பத்திற்கு சமமாக காலை வேளைகளில் கூடியளவில் ஒரு மணி நேரமாவது மாணவர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு செயற்திறன் மற்றும் சுகாதார வாழ்வை முன்னெடுப்பதற்குத் தேவையான உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு எமது நாட்டு பெற்றோர்களிடத்தில் அன்பாகவும், கௌரவமாகவும் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் பிள்ளைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் சுற்றுச் சூழலை எம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

கொவிட் - 19 தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பாடசாலைகளின் இணக்கப்பாட்டுடன் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கான வாய்ப்பு எமக்குள்ளது. கொவிட் - 19 தொற்று நிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்துக் கொண்டு நாம் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தினோம். எதிர்காலங்களிலும் அப்போட்டிகள் நடாத்துவதற்கு உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்படும் .

வரும் 04ம் திகதி பழைய விளையாட்டு வீரர்கள் மற்றும் புதிய விளையாட்டு வீரர்களுக்கிடையில் ரி - 20 கிரிக்கட் போட்டியினை பல்லேகலே விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போட்டியினை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, அப்போட்டியின் மூலம் கிடைக்கும் முழு வருமானமும் கொவிட் - 19 தொற்று தடுப்பு வேலைத்திட்டத்திற்கு வழங்கப்படும். தற்போதைய கொவிட் - 19 மூன்றாவது அலையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இப்போட்டியினை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க முடியாதுள்ளமை தொடர்பில் கவலையடைகின்றேன். எனினும் தற்போதுள்ள நிலை உயிரியல் குமிழியினுள் (Bubble) விளையாடுவதற்கு எந்த தடைகளும் இல்லை. தற்போது நிலவும் நிலைகளுக்கு மத்தியில் சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அவர்களோடு மிக நெருக்கமாக நாம் செயற்படுகின்றோம். எமது குறிக்கோளான விளையாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அவர்கள் பாரியளவில் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர்.

சூரியவெவ, தம்புள்ள, பல்லேகலே மற்றும் கெத்தாராம ஆகிய நான்கு விளையாட்டு மைதானங்களையம் பயன்படுத்தி இவ்வருடத்தின் எல்பிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டிகளையும் இலங்கையினுள் நடாத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது நாடு Bubble நடைமுறையினுள் சரியான முறையில் விளையாட்டு முகாமைத்துவம் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயிற்சி செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதால் சரியான சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு சர்வதேச போட்டிகளைக் கூட எமது நாட்டில் நடாத்துவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

புதிய விளையாட்டுச் சட்டத்தின் மூலம் புதிய யாப்பு தயாரிக்கப்பட்டு அனைத்து விளையாட்டுக்களின் கட்டமைப்பினை மாற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.

புத்தளம் விசேட நிருபர்


Add new comment

Or log in with...