அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாண சபை உயிர்ப்பிக்கப்பட வேண்டும்

மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் இன்று இந் நாட்டில் இருக்கக் கூடிய அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாண சபை உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.ஏனென்றால் மிகவும் கூடுலான பாடசாலைகள் மாகாண சபையின் கீழ் தான் வருகின்றன. இது ஒரு முக்கியமான விடயம் என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் தினகரனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்......

மாகாண சபைத் தேர்தல் நடக்குமோ இல்லையோ என்ற சந்தேகங்கள் இருந்த போதிலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக நடக்கக் கூடும் என்ற வாய்ப்பு அதிக பட்சம் இருக்கிறது. அது எப்பொழுது என்று இப்போது கூற முடியாது. ஆனாலும் மாகாண சபை நோக்கி எல்லா கட்சி மட்டங்களிலும் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்தக் கேள்விக்கு ஆட்சியில் இருக்கக் கூடிய அரசாங்கம் தான் பதிலளிக்க வேண்டும். இந்த தேர்தல் தொடர்பில் முக்கிய பிரச்சினை இருக்கிறது. பழைய விகிதாசர முறைப்படி தேர்தலை நடத்துவதா அல்லது தொகுதிவாரி அடிப்படையிலான தேர்தலை நடத்துவதா என்ற சிக்கல் இருக்கின்றது.

அவ்வாறு புதிய முறையில் செய்வதாயின் எல்லை நிர்ணயம் சரியாக திருத்தியமைக்கப்பட வில்லை. அவற்றை சரியாக தீர்மானித்து நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அதே போன்று இந்த தேர்தலை நடத்துவதில் எமது அண்டைய நாடான இந்தியா பாரிய அழுத்தத்தினை கொடுப்பதை நாங்கள் காணக் கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த நடப்பு அரசாங்கத்தின் சில காய் நகர்த்தலைப் பார்க்கும் பொழுது அவர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முஸ்தீபுகளைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக மாகாண சபைத் தேர்தல் இந்நாட்டின் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக இந்தியாவால் கொண்டு வரப்பட்டதாகும். எனினும் உங்கள் பார்வையில் இம்மாகாண சபையின் மூலம் யதார்த்த ரீதியாக அடையக் கூடிய அனுகூலங்கள் என்ன?

மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் இன்று இந் நாட்டில் இருக்கக் கூடிய அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாண சபை உயிர்ப்பிக்கப்பட வேண்டும். ஏனென்றால் மிகவும் கூடுலான பாடசாலைகள் மாகாண சபைக்கு கீழ் தான் வருகின்றன. இது ஒரு முக்கியமான விடயம். கண்டி மாவட்டத்தில் மாகாண சபைக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் மிகவும் பரிதாபகரமான நிலைமையில் உள்ளன. அவற்றை கட்டி எழுப்ப வேண்டிய அதிகளவு தேவை இருக்கிறது. கண்டி மாவட்ட முஸ்லிம்களுடைய கல்வி எழுச்சிக்கு வழிகோலும் செயற்பாடுகள் முன்னெடுப்பதற்கு ஒரு சாதனமாக இம்மாகாண சபை பயன்படுமென நான் கருதுகின்றேன்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் கண்டி முஸ்லிம்கள் தங்களுடைய வாக்குகளை சிந்தித்து வாக்குகளைப் பிரயோகிக்க முடியாமல் போனதன் காரணமாக முஸ்லிம் பிரதிநித்துவங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முஸ்லிம் வாக்குகள் சிதறிவிடும் பட்சத்தில் முஸ்லிம் பிரதிநித்துவங்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே இதற்கான திட்டங்கள் உங்களிடம் இருக்கின்றதா?

கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விசேடமாக கடைசியாக நடந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநித்துவங்கள் ஒழுங்காகப் பாதுகாக்கப்பட வில்லை என்று சொல்ல வேண்டும்.

அந்த வகையில் மாகாண சபைத் தேர்தல் நடந்தாலும் சரி அல்லது பாராளுமன்றத் தேர்தல் நடந்தாலும் சரி பிரதேச சபைத் தேர்தல் நடந்தாலும் சரி எமது முஸ்லிம் சமூகம் எல்லாத் தேர்தல்களிலும் சற்று நிதானத்துடன் தமது பிரதிநிதித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் எல்லோரும் செயற்பட வேண்டும்.

போட்டியிடக் கூடிய பிரதான கட்சிகள் அனைத்தும் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனால் கட்சி என்று பார்க்காமல் சமூகத்தின் மேல் அக்கறை உள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் இந்த சமூகம் அக்கறை செலுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்.

மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் நீங்களும் களமிறங்கவுள்ளீர்களா?

நிச்சயமாக. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதியானதாகும். எனினும் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கத்துடன் சேர்ந்துதான் ஆட்சி அமைத்தோம். இம்முறை நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் தனியாகத் தான் தேர்தலில் களமிறங்கினோம். வரக் கூடிய மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவது உறுதியான விடயம்.

நீங்கள் சுயாதீனமாக அல்லது தேசிய கட்சிகளுடன் இணைந்தா களமிறங்கவுள்ளீர்கள்?

சேர்ந்தோ அல்லது தனித்தோ என்ற விடயத்தில் பல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தி கருத்துக்களை அறிந்து வருகின்றோம். அதே நேரம் முஸ்லிம் பிரதிநித்துவத்தைப் பாதிக்காத வகையில் ஓர் ஒழுங்கு முறையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட இருக்கின்றோம். இதுவரையிலும் நாங்கள் எந்தவொரு இறுதி முடிவையும் இன்னும் எட்டவில்லை. இது சம்பந்தமாக பலதரப்பட்ட மட்டங்களுடன் நாங்கள் கலந்தாலோசனை செய்து வருகின்றோம். நிச்சயமாக சிறந்த முடிவினை எடுத்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் களமிறங்க இருக்கின்றோம் என்பது உறுதியானதாகும்.

அண்மைக் காலமாக முஸ்லிம்களுடைய அரசியல் வலுவிழந்து காணப்படுகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

அண்மைக் காலமாக அல்ல. இரு தசாப்தங்களாக முஸ்லிம்களுடைய அரசியல் வலுவிழந்து காணப்படுகிறது. இது இன்றும் கேள்விக் குறியாக இருப்பதுதான் உண்மையான நிலையாகும்.முஸ்லிம் அரசியல் தன்மைத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமாயின் முன்னர் இருந்த அரசியல் தலைவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளையும் இப்போதுள்ள அரசியல் தலைவர்களுடைய நடவடிக்கைகள் எவ்வகையில் அமைந்துள்ளன என்பது பற்றி ஒப்பிட்டுப் பார்த்தால் நன்றாக அறிந்து கொள்ள இயலுமாகும்.

இன்று இனவாதங்கள் தலைவிரித்தாடியதைப் போன்று கடந்த 20 வருடங்களுக்கு முன்னரும் எங்களது சமூகம் இப்படியான நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்துத்தான் இருந்தது. அந்த நேரத்தில் இருந்த தலைவர்கள் சிங்கள சகோதர பெரும்பான்மை சமூகத்தோடும் சிங்கள பெரும்பான்மை ஆட்சியார்களுடனும் மிக நெருக்கமான முறையில் அரசியல் நடடிவக்கைகளை முன்னெடுத்தமை காரணமாக அதில் எந்தவிதமான தாக்கமும் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை.

அப்படியாயின் விசேடமாக அவர்களிடத்தில் காணப்பட்ட அரசியல் பண்புகள் எவை என்று கூறுவீர்களா?

ஆம்.அந்தக் காலத்தில் இருந்த தலைவர்கள் தங்களுடைய சொந்த நிதிகளைப் பயன்படுத்தி தங்களுடைய சொத்துக்களைக் கூட விற்பனை செய்து சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் அவர்கள் பாடுபட்டுள்ளார்கள். இன்று எல்லோரும் தங்களுடைய பாராளுமன்ற ஆசனத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தனிப்பட்ட பிரயோசனங்களை அடைந்து கொள்வதற்காகவும் தான் முனைப்புடன் செயற்படுகின்றார்கள் என்பது நன்றாக புலப்படுகிறது.இந்த நிலைமை மாற வேண்டும். அடி மட்டத்தில் இருந்து நல்ல தலைமைத்துவங்கள் இனங்காணப்பட்டு அவர்கள் சமூகத்தால் முன்கொண்டு வரப்பட வேண்டும். நாங்கள் முக்கியமான கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் ஒரு பிரதேச சபை தவிசாளர் என்ற வகையில் முன் வைக்கும் ஆலோசனைகள் என்ன?

எமது சமூகம் ஒன்று பட்டு நல்ல தலைமத்துவங்களை இனங் கண்டு முன் கொண்டு வராவிட்டால் எதிர்காலத்தில் இன்னு மின்னும் கஷ்டங்களையே நாங்கள் நிச்சயமாக எதிர்நோக்க வேண்டி வரும்.எங்கள் அரசியல் முன்னெடுப்பை அடிமட்டத்தில் இருந்து தெரிவு செய்து அவர்களை முன் கொண்டு வரும் வேலைகளையே செய்து கொண்டு இருக்கின்றோம்.

இது எல்லா மட்டங்களிலும் எல்லாப் பிரதேசங்களிலும் இந்த முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் ஒரு தூய்மையான சிந்தனையோடு பணியாற்றக் கூடிய அரசியல் தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தை எமது முஸ்லிம் சமூகம் அதிகளவு உணர்ந்து செயற்பட வேண்டி இருக்கிறது. துணிவுள்ள செயற்திறன் மிக்க தலைமைத்துவங்களை உருவாக்குகின்ற அதேவேளையில் ஒரு பல்லின சமூகம் வாழக் கூடிய இந்த நாட்டில் ஏனைய சமூகங்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டக் கூடிய தலைமைத்துவங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு மாற்று மத சகோதரர்கள் பேரினவாதக் கட்சிகள் எப்படி இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்கிறார்களோ அதே மாதரி ஒரு போக்கினையே எமது முஸ்லிம் சமூகத்திலும் காணக் கூடியதாக இருக்கிறது. இது கவலைக்குரிய விடயம்.

இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்வது என்பது சமூகத்திலுள்ள உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு மட்டுமல்ல பிழையான வழிநடத்தலுக்கு மக்களை இட்டுச் செல்வதை இந்த தலைமைத்துவங்கள் சற்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

அப்படி நாங்கள் அல்ல இப்படித்தான் நாங்கள் அரசியல் செய்வோம் என்ற விடாப்பிடியுடன் அரசியல் செய்வோமாக இருந்தால் அது நிச்சயமாக எங்கள் அடுத்த சந்ததியினருக்கு மிகவும் பாரதூரமாக பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு இக்கெட்டான நிலைமைக்கு இட்டுச் செல்லும் என்பதுதான் என்னுடைய கருத்தாகும்.

ஆகவே நாம் அரசியலை ஒரு பொழுது போக்காகக் கொள்ளாமல் உணர்ச்சிபூர்வமான அரசியல் செய்வதில் இருந்து தவிர்ந்து ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அரசியலை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருக்கக் கூடிய எல்லா மட்டத்திலும் உள்ள மக்களும் ஒன்றிணைந்து புதுபுது தலைமைத்துவங்களை உருவாக்குவதற்கு ஒன்று பட்டு முன் வருதல் வேண்டும்.

இக்பால் அலி


Add new comment

Or log in with...