உலக வரலாற்று ஓட்டத்தின் திருப்புமுனை லைலத்துல் கத்ர் | தினகரன்

உலக வரலாற்று ஓட்டத்தின் திருப்புமுனை லைலத்துல் கத்ர்

இஸ்லாத்தில் 'லைலத்துல் கத்ர்' என்பது மாட்சிமை மிக்க இரவாகும். இது ரமழான் மாதத்தில் மிகுந்த முக்கியத்துவமும் சிறப்பும் பெற்று விளங்கும் இரவாகும். இந்த இரவு இம்மாதத்தின் இறுதிப் பத்திலுள்ள ஒற்றைப்படையான நாட்களில் ஒன்றில்தான் அமைந்திருக்கின்றது.

அந்த இரவில்தான் அருள் மறையாம் அல் குர்ஆன் அருளப்பட்டது. உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடன் இருந்து கொண்டிருக்கும் இக்குர்ஆன் 'லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்ற பாதுகாக்கப்பட்ட பதிவேட்டிலிருந்து முதல் வானத்தில் இருக்கும் 'பைத்துல் இஸ்ஸா'வுக்கு இவ்விரவில்தான் இறக்கி அருளப்பட்டது. அத்தோடு இஸ்லாத்தின் இறுதிதூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல் குர்ஆனின் முதல் ஐந்து வசனங்கள் அருளப்பட்டதும் இந்த இரவில்தான்.

இதனைத் தொடர்ந்து கால இட சூழல் தேவைகளுக்கு ஏற்ப கட்டம் கட்டமாக 23 வருட காலப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் ஊடாக இக்குர்ஆன் உலகிற்கு அருளப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டது.

இக்குர்ஆன் லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட ஆரம்பமானதுமே ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்படவில்லை. மாறாக இக்குர்ஆனின் குறிப்பிடத்தக்களவு பகுதி அருளப்பட்டிருந்த நிலையில் 15 ஆம் ஆண்டில் தான் அதாவது ஹிஜ்ரி 02 இல் இந்நோன்பு கடமையாக்கப்பட்டது. அது வரைக்கும் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்கும் முறைமை வழக்கில் இருந்தது.

அதேநேரம் அல் குர்ஆன் இந்த இரவு தொடர்பில் தனியொரு அத்தியாயத்தையே தன்னகத்தே கொண்டிருக்கின்றது.நன்மை தீமைகளையும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் பிரித்தறிவிக்கும் இக்குர்ஆன் அருளப்பட்ட இவ்விரவு ஒற்றைப்படையான எந்த நாளில் அமைந்திருக்கின்றது என்பதை சரியாக மக்களுக்கு அறிவித்து விடும் நோக்கில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வரும் போது இடைவழியில் இருவர் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதன் விளைவாக அவ்விரவை அச்சொட்டாக அறிவிக்க முடியாத நிலை நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும் இவ்விரவு ரமழான் மாதத்தின் இறுதிப் பத்திலுள்ள ஒற்றைப்படையான நாட்களில் ஒன்றில்தான் அமைந்திருக்கின்றது என்று அன்னார் அறிவித்திருக்கின்றார்.

மனிதனது ஈருலக வாழ்வின் விமோசனத்திற்கு நேர்வழிகாட்டிக் கொண்டிருக்கும் இவ்வருள்மறை அருளப்பட்ட இரவை சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் எல்லையில்லாத அளவுக்கு சிறப்பித்து வைத்துள்ளான். குறிப்பாக அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் மேலானதாக ஆக்கப்பட்டிருக்கின்றது. அவ்விரவில் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்கும் போது முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

இவ்விரவில் வானவர்களின் தலைவரான ஜிப்ரீல் (அலை) அவர்களும் வானவர்களும் அல்லாஹ்வின் கட்டளைப்படி (மனிதனின் உலக வாழ்வுடன் தொடர்பான) ஒவ்வொரு விவகாரத்தையும் குறிப்பாக ஆயுட்காலம், ரிஸ்க் நிர்ணயம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஏந்தியவாறு பூமிக்கு இறங்கி வருகின்றார்கள். அதாவது அவ்விரவில் வானவர்கள் அதிகமதிகம் பூமிக்கு இறங்குகின்றார்கள். வானவர்கள் இறங்குதல் என்பது அருளும் வளமும் பொழிவதுடன் அமைதலாகும். அந்தளவுக்கு இவ்விரவு அருட்பேறு நிறைந்த மாட்சிமை மிக்கதாக உள்ளது.

இவ்வாறு இறங்கும் வானவர்கள் குர்ஆன் ஒதுதல், இறைதுதி, இறைபுகழ் என்பவற்றில் ஈடுபட்டிருப்பவர்களை சூழந்து கொள்கின்றனர்.

அதேநேரம் இந்த இரவு தெளிவாகவும் ஒளிமயமாகவும் இருக்கும். அதாவது உதயமாகும் சந்திரன் அதில் ஒளிர்வது போன்று காட்சி தரும். எங்கும் அமைதி சூழ்ந்திருக்கும். அவ்விரவில் அதிக வெப்பமோ அதிக குளிரோ நிலவாது. அதிகாலையில் சூரியன் உதயமாகும் போது பலவீனமாகவும் சிவப்பு நிறமாகவும் காட்சி தரும். இவ்விரவு முதல் அதிகாலையில் வெளிச்சம் பரவும் வரையில் ஷைத்தான்கள் வெளியே வராது.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் இவ்விரவின் சிறப்பையும் மகத்துவத்தையும் அடைந்து கொள்வதில் நபி(ஸல்) அவர்கள் அதிக அக்கறை காட்டியுள்ளார்கள். இதன் நிமித்தம் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் இம்மாதத்தின் கடைசிப் பத்து நாட்களும் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருந்து இறைவணக்கங்களில் அதிகமதிகம் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தார்கள். அன்னார் வபாத்தான வருடம் லைலத்துல் கத்ர் இரவின் நிமித்தம் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்துள்ளார்கள்.

இந்த மாட்சிமை மிக்க இரவானது உலகில் மனித வரலாற்று ஓட்டத்தின் திருப்புமுனையாகவும் திகழுகின்றது. குறிப்பாக இந்த உலகின் தலைவிதியை மாற்றியமைத்தது இந்த இரவுதான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இவ்விரவில் நபி(ஸல்) அவர்களை சந்தித்து அல் குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை அருளியதன் ஊடாக உலக வரலாற்று ஓட்டத்தின் மாற்றத்திற்கு அடித்தளமிடப்பட்டது. அதன் ஊடாக மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அல் குர்ஆன் அருளப்பட்ட இந்த இரவை அடிப்படையாகக் கொண்டு லைலத்துல் கத்ர் இரவுக்கு முந்திய உலகம், லைலத்துல் கத்ர் இரவுக்கு பிந்திய உலகம் என உலக வரலாறு அமைந்திருக்கின்றது. உலக வரலாற்றின் பிரிகோடாகவும் அமைந்திருக்கின்றது இந்த இரவு.

அதாவது லைலத்துல் கத்ர் இரவுக்கு முந்திய உலகில் சமூக ஏற்ற தாழ்வுகள், குடும்ப, கோத்திர, சாதி கட்டமைப்புக்கள், கலாசார சீர்கேடுகள், அடக்குமுறைகள் தவறான நம்பிக்கைகள் என்பன மிகைத்திருந்தன. கோத்திரங்களுக்கு இடையிலான சண்டை சச்சரவுகள் தலைவிரித்தாடின. அவை பல தசாப்தங்களாக நீடித்து வந்தன. மனித சமத்துவம், ஐக்கியம், பெண்ணுரிமை என்பன அருகிப் போய் மனித நேயமும், மனிதாபிமானமும் அற்றுப் போயிருந்தன.

இந்த இரவுக்கு பிந்திய உலகிற்கு குர்ஆன் ஒளி பாய்ச்ச ஆரம்பித்தது. அந்த ஒளியில் நெறிப்படுத்தப்பட்டு வழிப்படுத்தப்படும் மனிதன் சீரும் சிறப்பும் பெற்று விளங்கும் நிலை உருவானது. சமூக ஏற்ற தாழ்வுகள் நீங்கி அமைதி, சமாதானம் தலைத்தோங்கவும் மனித நேயமும், மனிதாபிமானமும், சகோதரத்துவமும் கோலோச்சவும் ஆரம்பமானது. அத்தோடு முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு சமூக, பொருளாதார, அறிவியல், அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சி ஏற்படவும் வழிவகுத்திருக்கின்றது இந்த இரவு.

இவ்வாறு சிறப்புற்று விளங்கும் லைலத்தில் கத்ர் இரவு உலகம் இருக்கும் வரையும் வருடா வருடம் மனித சமூகத்தை கடந்து சென்று கொண்டே இருக்கும். அந்த வகையில் இவ்வருடம் இந்த இரவு அமைவுற்றுள்ள காலப்பகுதியை தற்போது மனித சமூகம் அடைந்திருக்கின்றது. அதனால் அந்த இரவை அடைந்து கொள்வதிலும் அவ்விரவு கொண்டுள்ள பாக்கியங்களைப் பெற்றுக்கொள்வதிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப முஸ்லிம்கள் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கடந்த காலங்களைப் போன்று இவ்விரவின் அருள்களையும் பாக்கியங்களையும் அடைந்து கொள்வதில் இம்முறை சுதந்திரமாக செயற்பட முடியாது. உலகிற்கே பெரும் சவாலாக விளங்கும் கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தல் நிலவும் காலப்பகுதியில்தான் இவ்வருடம் முஸ்லிம்களை இவ்விரவு அமைந்திருக்கும் காலப்பகுதி அடைந்திருக்கின்றது. அதனால் இந்த சவால் மிக்க காலப்பகுதியில் லைலத்துல் கத்ர் இரவு கொண்டுள்ள பாக்கியங்களை அடைந்து கொள்ள உச்ச கவனம் எடுக்கின்ற அதேவேளை கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தலைத் தவிர்த்து கொள்வதிலும் பொறுப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட தேவையையும் மறந்து விட முடியாது. அவற்றின் ஊடாக லைலத்துல் கத்ரின் பாக்கியங்களை அடைந்து கொள்ள முடிவதோடு கொவிட் 19 தொற்று பரவுதல் தொடரைத் துண்டிக்கப் பங்களித்த பெறுமையையும் பெற்றுக்கொள்ளவும் முடியும். அதுவே இன்றைய காலத்தின் தேவையும் கூட.

 

மர்லின் மரிக்கார்...

 


Add new comment

Or log in with...