போதைக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெறுவோருக்கு தொழில் பயிற்சி | தினகரன்

போதைக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெறுவோருக்கு தொழில் பயிற்சி

போதைப் பொருள் பாவனை தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருபவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குவதற்கான வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. திறன் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோருக்கிடையில் இத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

போதைப் பொருள் பாவனை தொடார்பில் குறைந்தது ஒரு வருட கால புனர்வாழ்வுக்கான நீதிமன்ற கட்டளை பெற்றவர்களுக்கு இந்த வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி வழங்குவது பற்றி ஆராயப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வீரவில புனர்வாழ்வு நிலையத்தில் தொழில் பயிற்சி வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

திறன் அபிவிருத்தி ,தொழில் கல்வி,ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ்வரும் தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை மற்றும் தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மேற்பார்வையில் மேற்படி போதைப் பொருள் பாவனை புனர்வாழ்வு தண்டனை பெறுபவர்களுக்கான தொழில் பயிற்சி திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது .

மேற்படி தொழிற் பயிற்சி திட்டம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது, பெண் கைதிகளுக்கு சிறந்த தொழில் வழிகாட்டல் வழங்குதல் மற்றும் அர்களது எதிர்காலம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் செயலாளர்கள்,சிறைச்சாலைகள் ஆணையாளர், இராஜங்க அமைச்சுகளின் அதிகாரிகள், சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வீரவில சிறைச்சாலை, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வீ.ஆர்.சில்வா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.உபுல்தெனிய உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் புனர்வாழ்வு நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வீரவில சிறைச்சாலையை அண்மையில் பார்வையிட்டனர்.

எம்.எஸ்.எம். முன்தஸிர்...

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...