மண் அகழ்வினை கட்டுப்படுத்த இராணுவ பாதுகாப்பு வேண்டும் | தினகரன்

மண் அகழ்வினை கட்டுப்படுத்த இராணுவ பாதுகாப்பு வேண்டும்

- கொக்காவில் மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவின் புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் தொடர்கின்ற மணல் அகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு கொக்காவில் பகுதியில் இராணுவ நிலையொன்று அமைக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள ஆற்றுப்படுகைகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டாலும் மணல் அகழ்வு நடைபெறுகின்ற பகுதிகளுக்கு கூட்டத்தினை நடாத்துகின்ற இணைத்தலைவர்களும் பிரதேச செயலாளரும் வருகை தருவதாக பல தடவைகள் கூறப்பட்டாலும் இணைத்தலைவர்கள் ஒருநாளும் மணல் அகழ்வு நடைபெறுகின்ற பகுதிகளுக்கு வருகை தந்ததில்லை.

புத்துவெட்டுவானில் இருந்து கொக்காவில் வரையான புனரமைக்கப்பட்ட வீதி மணல் டிப்பர்களினால் குண்டும்குழியுமாக மாறி உள்ளது. மேற்படி மூன்று கிராம அலுவலர் பிரிவுகளின் உள்வீதிகள் டிப்பர்களினால் சேதமடைந்துள்ளன.

பத்தாண்டுகளில் மணல் அகழ்வினைத் தடுப்பதற்கு பொலிசாரும் அதிகாரிகளும் தவறி விட்ட நிலையில் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு மணல் வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருப்பதற்கு கொக்காவில் பகுதியில் இராணுவ நிலையொன்றினை அமைத்து மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்தும்படி புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை அண்மையில் தரமுயர்த்தப்பட்டுள்ள ஐயன்கன்குளம் பொலிஸ் நிலைய பொலிசார் இப்பகுதிகளில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...