ஆஸ்பத்திரிகளில் நெருக்கடி நிலை ஓரிரு தினங்களில் நிவர்த்தியாகும்

-இன்று ஒருதொகை ரஷ்ய  தடுப்பூசி நாட்டை வந்தடையும்

ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இத்தினங்களில் ஆஸ்பத்திரிகளிலிருந்து வெளியேறி வரும் நிலையில் எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடி நிலைமை நிறைவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை;

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் கொரோனா வைரஸ் தடுப்பூசி 27 இலட்சம் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முதற் கட்டமாக அதில் ஒரு தொகுதி தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவின் உற்பத்தியான ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் மூன்று நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தடுப்பூசிகள் தாமதமாவதாலேயே இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் தாமதமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமைய அந்த நாட்டில் இருந்து 29 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்றைய தினம் சுமார் 2 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...