தெளிவான தொடர் பயிற்சிகள் வெற்றியை கட்டாயம் நல்கும் | தினகரன்

தெளிவான தொடர் பயிற்சிகள் வெற்றியை கட்டாயம் நல்கும்

கராத்தே தெரிவுக் குழு உறுப்பினர் அன்ரோடினேஸ்

இலங்கை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியாக ஐந்து நபர்களைக் கொண்ட (National Selection Committee) கராத்தே தெரிவுக்குழு உறுப்பினர்களில்ஒருவராக நியமிக்கப்பட்ட.கராத்தே பிரதம ஆசிரியரும், புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவன் அன்ரோடினேஸ்சை தினகரனுக்காக நேர்கண்டபோது.

கேள்வி : தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் நியமனம் எவ்வாறு வழங்கப்படுகிறது?

பதில்: தேசிய கராத்தே தெரிவுக்குழுவில் ஐவர் காணப்படுவர். இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தினால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களிலிருந்து இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் தேசிய விளையாட்டு குழாமினால் (National Sports Council) 5 பேர் தெரிவுசெய்யப்பட்டு நியமனம் அமைச்சினால் வழங்கப்படும்.

கேள்வி : தேசிய கராத்தேதெரிவுக் குழுவின் பணிகள் என்ன?

பதில் : இலங்கை தேசிய கராத்தே அணியினரை தெரிவு செய்வது, சர்வதேச நாடுகளில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கராத்தே அணி வீரர்களை தெரிவு செய்வது மேலும் விளையாட்டு அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப அது திறன் வீரர்களை தெரிவு செய்வது எமது பணியாகும்.

கேள்வி: கராத்தே தெரிவுக் குழு உறுப்பினராக உள்ள உங்கள் பணியின் சுயாதீனம் பற்றி விபரிக்க முடியுமா?

பதில்: ஆம்..

தேசிய கராத்தே தெரிவுக்குழுவில் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் உள்ளோம். வீரர்களை தெரிவு செய்யும் பணிகள் இலங்கை தேசிய தோ கராத்தே சம்மேளனத்தின் நிர்வாக குழு, தேசிய கராத்தே நடுவர் குழாம் மற்றும் தேசிய அணியின் பயிற்றுனர்கள் முன்னிலையில் சுயாதீனமாக நடைபெறும்.கராத்தே தெரிவுக்குழு தனது பணிகளை சுயாதீனமாக முன்னெடுத்து இலங்கை தேசிய நடுவர் குழாமின் உதவிகளையும் பெற்று இறுதி முடிவுகளை தீர்மானிக்கும். குறிப்பாக ஆண் பெண் போட்டியாளர்களுக்கென காட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டி பிரிவுகளுக்கான வீரர்களு க்கென தெரிவுப் போட்டிகள் நடத்தப்படும்.

கேள்வி:கராத்தே துறையில் தங்களது தேசிய மற்றும் சர்வதேசதகமைகள் தொடர்பாக சுருக்கமாக கூறவும்?

பதில்: ஆம்.. 1990 ஆம் ஆண்டு முதல் கராத்தே கலையில் தொடர்ச்சியாக எனக்கு ஈடுபாடு உண்டு. கராத்தே சுற்றுப் போட்டி தொடர்பான அனுபவங்களை பொறுத்தவரையில் இலங்கையில் தேசிய கராத்தே சுற்றுப் போட்டிகளிலும் மேலும் வெளிநாடுகளில் நடைபெறுகின்ற திறந்த கராத்தேசுற்றுப்போட்டிகளிலும்பங்குபற்றிய,வெற்றியீட்டிய அனுபவங்கள் உண்டு. குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், கனடா மற்றும் அமெரிக்கா ஆசிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கெடுத்து உள்ளேன்.

கராத்தே நடுவர் துறை அனுபவங்களை பொறுத்தவரையில் தேசிய கராத்தே ஏ தர குமித்தே நடுவராகவும், தேசிய கராத்தே ஏ தர காட்டா மத்தியஸ்தராகவும் தேசிய தேர்வில் சித்தியடைந்து உள்ளேன். இலங்கையின் கராத்தே சுற்றுப் போட்டிகள் மற்றும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜப்பான், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் நடுவராக கடமையாற்றியுள்ளேன்.

கராத்தே டிப்ளோமா தரத்தினை பொருத்தவரை இலங்கை, மலேசியா ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் தேர்வுகளில் நேரடியாக பங்கெடுத்து தற்போது 7ஆவது டான் டிப்ளோமா தரத்தினைபெற்றுள்ளமைமைகுறிப்பிடலாம்.குறிப்பாக கராத்தேயில் உயர்தர பயிற்சிகளை ஜப்பான், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் பெற்றுள்ளேன்.

தற்காப்பு கலை வரலாறு மற்றும் நுட்பங்கள் என்னும் நூலினை தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளேன்

கேள்வி : இலங்கையின் தேசிய கராத்தே அணியில் இடம்பிடிக்க விரும்பும் ஒரு வீரனுக்கு தங்களின் அறிவுரை என்ன?

பதில் :ஒரு நாட்டின் தேசிய விளையாட்டு அணியில் வீரனாக வருவதென்பது ஒரு சிறந்த இலட்சியம். அந்த இலட்சிய பாதைக்கு மிகுந்த அர்ப்பணிப்பு அவசியமாகும். கடின உழைப்பு ,விடாமுயற்சி சிறப்பான வழிகாட்டுதல் இன்றியமையாததாகும்.

சிறு வயது முதலே தொடர்ச்சியாக இடைவிடாது பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை எப்போதும் மனதில் வைத்திருத்தல் வேண்டும். மாவட்ட, மாகாண, தேசிய ரீதியாக நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் தவறாது பங்கெடுத்து திறனை வெளிப்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக தேசிய ரீதியாக போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெறும்பொழுது தேசிய கராத்தே தோ சம்மேளனத்தின் அறிவித்தலின் பிரகாரம் தெரிவுப்போட்டிகளுக்கு விண்ணப்பித்து அதிலும் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

சில சமயங்களில் தேசிய கராத்தே தோ சம்மேளனம் வழங்கும் விசேட பயிற்சி பட்டறைகளில் பங்கெடுத்து நுட்பங்களை கற்று பயிற்சி செய்வது சாலச்சிறந்தது.

விடாமுயற்சியுடன் கூடிய நேரிய, தெளிவான தொடர் பயிற்சிகள் வெற்றியை கட்டாயம் நல்கும். எப்போதும் இலட்சியத்தை மனதில் வைத்து அதன் வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

நேர்கண்டவர் : யாழ்.விளையாட்டு நிருபர்


Add new comment

Or log in with...