தமிழக புதிய ஆட்சிக்கு வாழ்த்து | தினகரன்

தமிழக புதிய ஆட்சிக்கு வாழ்த்து

கலைஞரின் சிந்தனைகள் தமிழகத்தில் கல்வெட்டுக்களாக காலூன்றியுள்ளன

- ஸ்டாலினின் வெற்றிக்கு ஹாபிஸ் நஸீர் வாழ்த்து

தமிழகத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரு வெற்றி பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெற்றி குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.

தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வென்றிருப்பது கலைஞர் கருணாநிதியின் ஆளுமைக்கு அடையாளமாகத் திகழப்போகிறது. இந்த வெற்றியை வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளதாக எண்ண முடியாது. மாறாக,கலைஞரின் சிந்தனையும்,செல்வாக்கும் தமிழக அரசியலில் அழிக்க முடியாத கல்வெட்டுக்களாகி உயர்ந்து நிற்பதாகவே எண்ண முடிகிறது.

ஸ்டாலினின் தனிமனித ஆளுமையும் அவர் அரசியலில் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் புடம் போடப்பட்டு வந்தமையினதும் வெளிப்பாடுதான் அவரை இந்த உச்சப்பதவிக்கு உயர்த்தியுள்ளது. அவரின் வெற்றியை இவ்வாறுதான் எண்ணுகின்றேன். தமிழகத்தின் தலைமையை ஸ்டாலின் பொறுப்பேற்றதன், பின்னர் இந்த மாநிலம் மேலும் முன்னேற்றம்அடையுமென நம்புகின்றேன்.

எமது கட்சி, கட்சித் தலைவருடன் மிக நெருக்கத்தைப் பேணிய தமிழக தலைவர் ஒருவர், ஆட்சிபீடமேறுவது அரசியல் ரீதியாக எமக்கு கிடைத்த ஆறுதல்தான்.மதம்,இனங்களைக் கடந்து மொழிரீதியாக மக்களைப் பிணைத்த கட்சிதான் தி.மு.க.தமிழைப் பேசுவோர் என்பதால்,இது எம்மையும் மகிழ்விக்கிறது.இந்த அணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சியும் ஆசனங்களை வென்றிருப்பதால்,சிறுபான்மைச் சமூகங்களின் அங்கீகாரமாக தி.மு.க நோக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தின் புதிய ஆட்சிக்கு த.மு.கூ. தலைவர் மனோ வாழ்த்து

தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்க தயாராவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தேர்தல் காலத்திலும் சரி, இன்றைய முடிவுகளின் போதும் சரி, தமிழக அரசியல் கட்சிகளை பற்றி, தமிழக அரசியல் தலைவர்களை பற்றி, தரக்குறைவாக பண்பற்று பேசி எமது உணர்வுகளை நாம் கொட்டக்கூடாது.

அப்படி ஆத்திரப்படும் அளவுக்கு, நமது நாட்டு தமிழ் அரசியல் தலைமைகளும், வரலாறு முழுக்க ஏதோ பிழையே செய்யாத அதி உத்தம யோக்கியர்களுமல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தியா தொடர்பில் நமது கட்சிகள், அமைப்புகள் பல தவறுகளை வரலாற்றில் செய்துள்ளன.

இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாகும். அங்கு வாழும் சுமார் எட்டு கோடி தமிழர், எமது உடன்பிறப்புகள். அந்த எட்டுக்கோடி என்பது எமது பாதுகாப்பு கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்பு கவசம் சரியாக பயன்படாமல் போய் விட்டது. இதற்கான காரணங்கள் பல. அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல.

ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்போம்.


Add new comment

Or log in with...