மலையக தோட்டத் தொழிலாளரின் காணி உரிமையை வென்றெடுப்பதே மேதின கோரிக்கையாக அமையட்டும்!

- பெண்களின் அவலங்களை ஆராய்ந்து தீர்வு காண தனியான அதிகார சபை அமைக்கப்பட வேண்டும்

உலக தொழிலாளர்களின் ஒன்றுபட்ட குரலை ஒலிக்கச் செய்யும் 2021 ஆம் ஆண்டு மேதின நிகழ்வுகள் கொவிட்-19 காரணமாக முடக்கத்திற்கு உள்ளாகியமை உழைக்கும்
வர்கத்தினருக்கு இடையூறாக அமைந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மலையக
மக்களின் 2021 ம் ஆண்டு மேதின குரலை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஏனைய
தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் முன்னெடுப்பது அவசியம்.

தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் மலையகத்தில் உயிர் நீத்த தியாகிகளை இன்றைய தினம் நினைவில் கொள்வோம். 200 வருட காலத்துக்கும் மேலாக தமது அடிப்படை உரிமைகளை இழந்து மலையக சமூகம் வாழ்ந்து வருகின்றது. கௌரவமான வாழ்க்கைக்கு அடிப்படை அம்சமாக உள்ள நில உரிமையை பெற்றுக் கொடுக்க இதுவரை முடியாமல் போயுள்ளது. ஆதலால் மலையக மக்களுக்கான நில உரிமையை வென்றெடுப்பது பிரதான கோரிக்கையாக அமைய வேண்டும்.

மலையக மக்களுக்கான நில உரிமையை உறுதி செய்து கொடுத்தல் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியின் மூலமாக கட்டியெழுப்பப்படும் வாழ்வாதார மார்க்கங்களுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதன் மூலம் அந்த மக்களின் உரிமைகளை மட்டுமன்றி நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

இயற்கைக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறை இன்று பல்வேறு சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிக்க காரணமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்குவது என்பது நாட்டின் சுற்றாடல் கட்டமைப்பு மற்றும் காலநிலை என்பவற்றின் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்த காரணமாக அமைவதோடு ஏனைய விவசாயக் கட்டமைப்புக்கள் மீதும் பாதிப்புக்களை எற்படுத்தும்.

இந்த நிலைமையில் நாம் தொழிலாளர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் என்பவற்றையும் தாண்டி முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. மாற்றுவழி முறையாக இலங்கையின் பயிர்ச்செய்கை மற்றும் பொருளாதாரத் துறையின் இதயமான பெருந்தோட்டப் பிரதேசங்கள் உட்பட மத்திய மலையகப் பிரதேசம் மற்றும் அங்கு அமைந்துள்ள இயற்கை வளங்கள், சுற்றாடல் கட்டமைப்புக்கள், நீர்ரேந்து பிரதேசங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி முறையை கடைப்பிடித்தல் மிகவும் அவசியமாகும்.

இதனை பெற்றுக் கொள்ள பொருத்தமான நிர்வாக முறையை கட்டியெழுப்புதல் முக்கியமாகும். மலையக சமூகத்தின் காணி, வீடு, கல்வி, சுகாதாரம், உணவு, தொழில் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உட்பட வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவர்களது பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் அவசியமாகும்.

மலையக சமூகத்தின் தீவிரமான காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், காணிகளை தங்களது வீடமைப்பிற்கும் மற்றும் பல்லின பயிர்ச் செய்கைக்கும் பயன்படுத்துவதற்கான காணி உரித்துடைய சமூகமாக இவர்களை மாற்றுதல் மற்றும் கௌரவமான வாழ்வுக்கான உற்பத்தியின் மூலமாக நிலைபேறான வாழ்வாதாரத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன அவசியம்.

மலையக சமூகத்தினது போதியளவு தனியான வீடு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியினை உறுதிப்படுத்த, தோட்டத் தொழிலாளர் அல்லாத குடும்பங்கள் உள்ளடங்களாக ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் தெளிவான காணி உரித்து உறுதிகளுடன் கூட்டு உரித்து அல்லது ஆண் பெண் இருபாலாருக்குமான சம உரிமையுடன் காணி வழங்க வேண்டும்.

பெருந்தோட்டக் கைத்தொழிலை இலாபமுடைய, சூழல் நேய, எதிர்கால நோக்காக கொண்ட தொழில் துறையாக மாற்றுவதற்கு பாரம்பரிய முறையிலான தற்போதைய பெருந்தோட்டக் கைத்தொழிலை தொழிலாளர்களுடைய சுய முகாமை கூட்டுப் பெருந்தோட்ட கம்பனிகளாக மாற்றியமைத்தல் வேண்டும். இதற்காக, தனிப்பயிரில் இருந்து பல்லின பயிர்ச் செய்கை அடிப்படையிலான சூழலியல் விவசாய முறைமைக்கு மாற்றியமைத்தல், நீரேந்து பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த அபிவிருத்தியை முன்னெடுத்தல், ஒன்றிணைந்த பொருளாதார அணுகுமுறைககளின் அடிப்படையில் புதிய பொருளாதார அமைப்பை உருவாக்குதல் போன்றவையெல்லாம் அவசியம்.

உணவு மற்றும் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதற்காகவும், அதேநேரம் உணவு இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுப் பொருளாதார செயற் திட்டங்களை முன்னெடுப்பதற்கான பொறுப்புக்களை பெருந்தோட்ட சமூகத்திற்கு கையளித்தல் வேண்டும்.

விவசாய திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்கள் மூலமாக அவசியமான மானியங்கள் மற்றும் ஏனைய உள்ளீடுகள் (விதைகள், உரம்) வழங்கப்படல் முக்கியம்.

தேசிய வீடமைப்புக் கொள்கைகளில் மலையக சமூகமானது உள்ளடக்கப்படுவதுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பொருத்தமான வீடமைப்பினை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் பிரதானம்.

1993ம் ஆண்டிலிருந்து ஊழியர் சேமலாப நிதியக் கடன், தோட்ட வீடமைப்பு கூட்டுறவு நிதி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய நிதி உதவிகள் போன்ற வேறுபட்ட வீடமைப்புத் திட்டங்களினால் கட்டப்பட்ட 37000 வீடுகளுக்கும் பொருத்தமான ஆவணங்களுடன் தெளிவான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படல் வேண்டும்.

மண்சரிவிற்கான அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மலையக சமூகத்தினரை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தல் பிரதானம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1000.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதனால் பெருந்தோட்டக் கம்பனிகளால் தொழிலாளர்களின் மீது திணிக்கப்படும் தொழில் பலவந்தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழில் சட்டங்களையும், தொழில் மரபுகளையும் உறுதிப்படுத்துதல்,கொவிட்-19 பரவலின் காரணமாக உலக தேயிலை சந்தையின் கேள்வி அதிகரித்துள்ளதால் ஊக்க கொடுப்பனவு அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படல், மலையக அபிவிருத்தி அதிகார சபைக்கு தேவையானநிதி மற்றும் மூல வளங்களை பெற்றுக் கொடுத்து அதன் சேவையை மக்களுக்காக இலகுபடுத்துதல் போன்றவையெல்லாம் அவசியமாகும்.

பெருந்தோட்ட பெண்களின் அவலங்களை ஆராய்தல் மற்றும் கௌரவம், உரிமை, தொழிலில் நிர்வாக மட்டத்துக்கு பதவி உயர்வு மற்றும் எதிர்கால நோக்குநிலை வாய்ப்புக்களை வலுவாக வலியுறுத்தக் கூடிய வகையில் பெண்களின் தேவைகளுக்கான நிரந்தர அதிகாரசபையினை முன்மொழிதல் வேண்டும்.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம்
மஸ்கெலியா


There is 1 Comment

Add new comment

Or log in with...