வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்ட இளைஞனுக்கு பிணை | தினகரன்

வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்ட இளைஞனுக்கு பிணை

வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்ட இளைஞனுக்கு பிணை-Borella Honking Protest-Youth Released On Bail

- நீதிமன்றிலிருந்து வந்து அரசாங்கம், பொலிஸாரிடம் மன்னிப்பு கோரினார்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பென்ஹி அழைத்து வரப்பட்ட வாகனத் தொடரணியின் போது, வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பு வெளியிட்டமை தொடர்பில் கைதான இளைஞர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி இரவு சீன பாதுகாப்பு அமைச்சர் அழைத்து வரப்பட்ட வாகனப் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொரளை பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, ஏனைய வாகன சாரதிகளை தூண்டி அவர்களை ஒன்றுகூட்ட்டியமை, வாகன பேரணிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, குறித்த இளைஞர் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்றையதினம் (30) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எச்சரித்து, ரூபா 50,000 சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றிலிருந்து வெளியே வந்த இளைஞர்,

"என்னால் தவறொன்று நடந்து விட்டது அதற்காக, இலங்கை அரசாங்கத்திடமும், பொலிசாரிடமும் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்ததோடு, இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், பொலிஸாரும் முகம் கொடுத்த சிரமம் தொடர்பில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு மன்னிப்புக் கோருமாறு உங்களுக்கு ஏதேனும் வற்புறுத்தல்கள் உள்ளதா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, எவ்வித பதிலையும் அளிக்காது, குறித்த இளைஞர் அங்கிருந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...