இலங்கை-சீன பாதுகாப்பு பிரதானிகள் நடத்திய இருதரப்பு கலந்துரையாடல்

வரலாற்று ரீதியான நட்பு நாடுகள் இரண்டுக்குமிடையே இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களும் கைச்சாத்து

சீன நாட்டின் கவுன்சிலரும், பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு இடையே இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) நடைபெற்றது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் தலைமையிலான சீன தூதுக்குழுவுடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹோங், இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்ட கால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் குணரத்ன பௌத்தம், வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகளாவிய இணைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா இலங்கையின் வரலாற்று ரீதியில் நட்பு நாடாக இருந்து வருகின்றது எனக் குறிப்பிட்டார். மேலும், அண்மையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு பாதுகாப்பு செயலாளர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் ஃபெங், நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இலங்கை சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமும் மாணவர் சங்கத்தின் தலைவரும், ஸ்தாபக உறுப்பினருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) விஜித ரவிப்பிரிய ஆகியோரின் அழைப்பின் பேரில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் சீன தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்த ஜெனரல் ஃபெங் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த இரு தரப்புக் கலந்துரையாடலில் சீன இராணுவ இணைந்த படைகளின் பிரதிப் பிரதாணியான லெப்டினன்ட் ஜெனரல் ஷாவோ யுவான்மிங், மத்திய இராணுவ ஆணைக் குழுவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி குவேய், பொது அலுவலக பிரதி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஷென் பாங்வ்,தென் பிராந்திய கட்டளையகத்தின் உதவிப் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஹ_ சியான்ஜுன் மற்றும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்...


Add new comment

Or log in with...